படங்களை ரீமேக் செய்வது எனக்கு பிடிக்காது: துல்கர் சல்மான்
நடிகர் துல்கர் சல்மான், மலையாள படவுலகில் தனது பயணத்தை தொடங்கினாலும், தற்போது அவர் பான்-இந்தியா நடிகராக வளர்ந்துள்ளார். நடிகர் மம்மூட்டியின் வாரிசான துல்கர் சல்மான், தனக்கென ஒரு முத்திரையை பதித்து வருகிறார். அவர் தேர்வு செய்யும் படங்களும் வித்தியாச கதையம்சம் கொண்டிருக்கும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் நடிகர் மட்டுமின்றி, ஒரு பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டுள்ளார். கடைசியாக 'சீதா ராமம்' என்ற படத்தில் நடித்திருந்த துல்கர் தற்போது, 'கிங் அஃப் கோத்தா' என்ற படத்தில் நடித்துள்ளார். அதோடு, 'கன்ஸ் அண்ட் குலாப்' என்ற நெட்ஃபிலிக்ஸ் தொடரிலும் நடித்துள்ளார்.
"அப்பாவின் படங்களை எப்போதும் ரீமேக் செய்ய மாட்டேன்"
இரண்டுமே வெளியிட தயாராகி வருகிறது. இதன் ப்ரோமோஷன் பணிகளில் இருந்தவர், படங்களை ரீமேக் செய்வது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். "துபாயில் பார்த்த வேலையை, சினிமாவின் மீதிருந்த காதலால் உதறித்தள்ளிவிட்டு அப்பாவை பின்பற்றி, நடிக்க வந்தேன். சினிமா துறையில், என் அப்பாவை எனக்கான மிகப் பெரிய முன்னுதாரணமாக பார்க்கிறேன்" என்றார். அதோடு, "உண்மையில் எனக்கு படங்களை ரீமேக் செய்வதில் நம்பிக்கை இல்லை. கிளாசிக்ஸைத் தொடாமல் அப்படியே விட்டுவிட வேண்டும் என்பது என் கருத்து. குறிப்பாக, அப்பாவின் எந்தப் படத்தையும் ரீமேக் செய்து நடிக்க மாட்டேன்" என தெரிவித்துள்ளார்.