Loading...
டோரதி ஓடிடி விவாதம்: கீர்த்தி சுரேஷ் கதாபாத்திர மரணம்; இறுதி காட்சி குறித்து ரசிகர்கள் கருத்து
ஓடிடியில் வெளியான டோரதி திரைப்படம் ரசிகர்களிடையே தீவிர விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

டோரதி ஓடிடி விவாதம்: கீர்த்தி சுரேஷ் கதாபாத்திர மரணம்; இறுதி காட்சி குறித்து ரசிகர்கள் கருத்து

எழுதியவர் Vasuki
Oct 24, 2026
01:18 pm

செய்தி முன்னோட்டம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்ற டோரதி திரைப்படம், அக்டோபர் 23 முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படத் தொடங்கியுள்ளது. 1990-களின் மதுரை பின்னணியில் திருநங்கைகளின் அடையாளம் மற்றும் அவர்கள் சமூகத்தில் சந்திக்கும் புறக்கணிப்புகளை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம், ஓடிடியில் வெளியானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாகக் கீர்த்தி சுரேஷ் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் மர்ம மரணம், கார்த்தி மற்றும் சுப்பு கதாபாத்திரங்களுக்கு இடையேயான இறுதிக் காட்சி, மற்றும் படத்தில் இடம்பெற்ற முத்தக் காட்சி ஆகியவை குறித்து ரசிகர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

கிளைமாக்ஸ் சர்ச்சை

கீர்த்தி சுரேஷ் மரணம் குறித்த கோட்பாடுகள்

படத்தில் கீர்த்தி சுரேஷின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து இணையத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

சாதி மாறுபட்ட காரணத்தால் மாமனாரே அவரைக் கொன்றிருக்கலாம் என்றும், அல்லது அவரிடம் தவறாக நடக்க முயன்று பின்னர் தனது மகனுடன் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் பல கோணங்களில் விவாதிக்கின்றனர்.

அதேநேரம், கார்த்தி மற்றும் சுப்பு இடையேயான இறுதி முத்தக் காட்சி தேவையா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பியுள்ளனர்.

கார்த்தி சுப்புவை வாகனத்தில் இறக்கிவிட்டு வாரேண்டி என்று சொல்லி விடைபெறுவது போன்ற எளிய காட்சியே அவரது மன மாற்றத்தை உணர்த்தப் போதுமானது என்றும், முத்தக் காட்சியைத் தவிர்த்திருந்தால் தேவையில்லாத சர்ச்சைகள் எழுந்திருக்காது என்றும் சில ரசிகர்கள் மாற்று முடிவுக்கான யோசனைகளைத் தெரிவித்துள்ளனர்.

திருநங்கைகளின் வாழ்க்கை

துணிச்சலான முயற்சிக்குக் குவியும் பாராட்டு

அதேசமயம், கதையின் ஆழமான போக்கைப் புரிந்து கொள்ளாமல் வெறும் முத்தக் காட்சியை மட்டுமே முன்னிறுத்திப் புறக்கணிக்கக் கோருவது ஏற்புடையதல்ல என்று மற்றொரு தரப்பினர் வாதிடுகின்றனர்.

சமூகம் பேசத் தயங்கும் ஒரு முக்கியமான பிரச்சினையைத் துணிச்சலாகக் கையாண்டதற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இளையராஜாவின் இசை, சனந்த், ரிஷிகாந்த், அஞ்சலி நாயர், சௌந்தரராஜா ஆகியோரின் சிறப்பான நடிப்பு மற்றும் ஒற்றை ஷாட்டில் எடுக்கப்பட்ட நீண்ட கேமரா காட்சிகள் ஆகியவை ரசிகர்களின் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளன.

தமிழ் சினிமாவில் திருநங்கைகளின் வாழ்க்கையை மிக யதார்த்தமாக பதிவு செய்த முக்கியமான படைப்பாக இது பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT