LOADING...
மகன் மனோஜின் மறைவின் அதிர்ச்சியில் இருந்து மீளாத இயக்குனர் இமயம் பாரதிராஜா; தற்போது எப்படி இருக்கிறார்?
தன் ஒரே மகனை இழந்து வாடும் பாரதிராஜா தினமும் கண்ணீருடன் இருக்கிறார்

மகன் மனோஜின் மறைவின் அதிர்ச்சியில் இருந்து மீளாத இயக்குனர் இமயம் பாரதிராஜா; தற்போது எப்படி இருக்கிறார்?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 29, 2025
11:34 am

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் சகாப்த இயக்குனரும், 'இயக்குனர் இமயம்' என்று ரசிகர்களால் போற்றப்படுபவருமான பாரதிராஜா அவர்களின் தற்போதைய உடல்நிலை குறித்து அவரது சகோதரர் ஜெயராஜ் பகிர்ந்துள்ள தகவல்கள் திரையுலக வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. அண்மையில் தனது மகனை இழந்த சோகத்தில் தவித்துவரும் பாரதிராஜா, தனது நினைவாற்றலை மெல்ல மெல்ல இழந்து வருவதாக ஜெயராஜ் தெரிவித்துள்ளார். பாரதிராஜாவின் மகனும், நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா, கடந்த ஏப்ரல் மாதம் திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். இந்தப் பேரிழப்பில் இருந்து பாரதிராஜாவின் குடும்பம் இன்றுவரை மீளவில்லை. குறிப்பாக, தன் ஒரே மகனை இழந்து வாடும் பாரதிராஜா தினமும் கண்ணீருடன் இருக்கிறார் என அவரது சகோதரர் ஜெயராஜ் கூறியுள்ளார்.

விவரம்

மகளின் பராமரிப்பில் இருக்கும் பாரதிராஜா

கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பாரதிராஜா, மகனின் மறைவுக்குப் பிறகு மனதளவில் மிகவும் சோர்ந்துவிட்டதாகவும், மலேசியாவில் உள்ள மகள் பராமரிப்பில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மகனின் நினைவுகளைத் தவிர்க்கும் பொருட்டு, திரைப்படத் துறையைச் சேர்ந்த யாரையும் அவரைச் சந்திக்க அனுமதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. "பாரதிராஜா தன்னுடைய மகனின் நினைவாலேயே மெல்ல மெல்ல தனது நினைவாற்றலை இழந்து வருகிறார்," என்று ஜெயராஜ் கவலை தெரிவித்துள்ளார். மேலும், "ஒருமுறை என் கையைப் பிடித்துக் கொண்டு,'உன்னை நான் என்னுடைய படங்களில் 10 -15 வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தி இருந்தால், இன்று நீயும் ஒரு நல்ல நிலைக்கு வந்திருப்பாய். அதைச் செய்யத் தவறிவிட்டேன்...என்னை மன்னித்துவிடு' என கைகளைப் பற்றிக்கொண்டு அழுதார்," என்று ஜெயராஜ் கண்ணீருடன் தெரிவித்தார்.