இசைஞானி இளையராஜாவுக்கு விழுந்த பலத்த அடி! 134 படங்களின் பாடல்களுக்கு உரிமை கோர டெல்லி உயர் நீதிமன்றம் தடை
செய்தி முன்னோட்டம்
இசைஞானி இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் பாடல்களை அவர் வணிக ரீதியாக பயன்படுத்துவதற்கோ அல்லது பிறருக்கு உரிமம் வழங்குவதற்கோ தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்பாடல்களின் காப்புரிமை தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று கூறி சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இளையராஜாவுக்கு எதிராக ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீதிமன்றம் இன்று நிரந்தரமாக்கியுள்ளது.
தடை
தடை விதிக்கப்பட்ட 134 திரைப்படங்களின் பட்டியல்
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கெடேலா இன்று இந்த முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளார். சரிகம நிறுவனம் உரிமை கோரும் இந்த 134 படங்களின் பட்டியலில் இளையராஜாவின் இசைப் பயணத்தில் மைல்கல்லாக கருதப்படும் '16 வயதினிலே', 'முள்ளும் மலரும்', 'நிழல்கள்', 'மூடுபனி' மற்றும் 'பல்லவி அனுபல்லவி' உள்ளிட்ட பல ஐகானிக் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த திரைப்படங்கள் அனைத்தும் 1976 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வெளியானவை என்பது குறிப்பிடத்தக்கது.
வாதம்
காப்புரிமை சட்டமும் சரிகம நிறுவனத்தின் வாதமும்
முன்னர் 'தி கிராமஃபோன் கம்பெனி ஆஃப் இந்தியா' என்று அழைக்கப்பட்ட சரிகம நிறுவனம், கடந்த பிப்ரவரி 2026 இல் இந்த வழக்கை தொடர்ந்தது. 1957 ஆம் ஆண்டின் காப்புரிமைச் சட்டம் பிரிவு 17(b)-இன் படி, ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் பணத்தை கொடுத்து ஒரு இசையமைப்பாளரை வேலைக்கு அமர்த்தும்போது, அந்தப் பாடல்களின் முதல் காப்புரிமை தயாரிப்பாளருக்கே சொந்தமாகிறது. அந்த தயாரிப்பாளர்களிடம் இருந்து ஒப்பந்தங்கள் மூலம் முறைப்படி காப்புரிமையைப் பெற்றுள்ளதால், இப்பாடல்களின் தற்போதைய முழு உரிமையாளர் தாங்கள் தான் என்று சரிகம வாதிட்டது.
தீர்ப்பு
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவு
கடந்த ஜனவரி 13, 2026 அன்று இளையராஜா தனது இசை பயணத்தில் உருவாக்கிய அனைத்து பாடல்களுக்கும் தமக்கே முழு உரிமை உண்டு என சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியிருந்தார். மேலும் அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ், ஜியோசாவன் போன்ற தளங்களில் இவற்றை பதிவேற்றமும் செய்தார். இதை எதிர்த்தே சரிகம நீதிமன்றம் சென்றது. இவ்வழக்கில், 1977 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை சுட்டிக்காட்டிய டெல்லி உயர் நீதிமன்றம், தயாரிப்பாளருடன் தனியாக ஒப்பந்தம் இல்லாத பட்சத்தில் இசையமைப்பாளருக்கு பாடல்கள் மீது காப்புரிமை கோர முடியாது எனக் கூறி இளையராஜாவுக்கு தடை விதித்துள்ளது.