டக்கார் 2026 இளைஞர் ஒலிம்பிக்ஸ்: பீச் மல்யுத்தத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய வீராங்கனை தான்யா சாதனை
செய்தி முன்னோட்டம்
செனகல் நாட்டின் டக்கார் நகரில் நடைபெற்று வரும் 2026 இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், இந்திய மல்யுத்த வீராங்கனை தான்யா பீச் மல்யுத்தத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். சாலே கடற்கரை வளாகத்தில் நடைபெற்ற பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில், சீனாவின் மின் ஜாவோவை எதிர்கொண்ட தான்யா 1-2 என்ற புள்ளிக் கணக்கில் போராடித் தோல்வியடைந்தார். இருப்பினும் இத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட பீச் மல்யுத்தப் பிரிவில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்த வீராங்கனை என்ற பெருமையை அவர் அடைந்துள்ளார்.
அரையிறுதி வெற்றி
தான்யாவின் சாதனை பின்னணி
முன்னதாக நடைபெற்ற விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில், அமெரிக்காவின் மாடில்டா ரூபியை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தான்யா இறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றிருந்தார்.
நடப்பு ஆண்டில் அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்ற யு-17 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் 69 கிலோ பிரிவில் வெண்கலமும், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளியும் வென்ற இவர், தற்போது இளைஞர் ஒலிம்பிக் மேடையிலும் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
சர்வதேச அரங்கில் தொடர்ந்து நிலவி வரும் இவரது நிலையான ஆட்டத்திறன் இந்திய மல்யுத்த விளையாட்டின் எதிர்காலத்திற்கு மிகுந்த ஊக்கத்தை அளிப்பதாக அமைந்துள்ளது.
டக்கார் 2026
இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்கப் பட்டியல்
தான்யாவின் இந்த வெற்றியின் மூலம், நடப்பு டக்கார் இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மொத்தப் பதக்க எண்ணிக்கை 3 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களுடன் ஏழாக உயர்ந்துள்ளது.
ஜுடோவில் குஷ்பு ரஜாக்பாய் தர்ஜாதா மற்றும் பேட்மிண்டனில் தன்வி பத்ரி ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
நீச்சல் பிரிவில் தினிதி தேசிங்கு இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
மேலும் தீர்த்தங்க் பெகு மற்றும் ராஜ்குமாரி லான்சென்பி சானு ஆகியோரும் வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.