LOADING...
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு! விஜய்யை விமர்சித்ததால் தாக்குதலா?
நேற்று மதியம் சென்னை கொட்டிவாக்கத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு! விஜய்யை விமர்சித்ததால் தாக்குதலா?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 27, 2026
09:40 am

செய்தி முன்னோட்டம்

பிரபல இசையமைப்பாளரும், தொலைக்காட்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவர் அண்மையில் முன்வைத்த கடுமையான விமர்சனங்களின் பின்னணியில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று மதியம், ஜேம்ஸ் வசந்தன் தனது குடும்பத்தினருடன் திருவான்மியூர் அருகே உள்ள கொட்டிவாக்கத்தில் இருக்கும் ஒரு உணவகத்திற்குச் சாப்பிடுவதற்காக சென்றிருந்தார். உணவருந்திவிட்டுத் திரும்பிய அவர், பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தனது காரின் பின்பக்க ஜன்னல் கண்ணாடி சுக்குநூறாக உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்தச் சம்பவம் தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்ட தாக்குதலா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பின்னணி

தவெக - விஜய் குறித்த விமர்சன பின்னணி

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நிலைப்பாடுகளை ஜேம்ஸ் வசந்தன் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அண்மையில் தவெக தொண்டர்களுடன் நடந்த கலந்துரையாடலில், "விஜய் வருமான வரியைச் சரியாகச் செலுத்தியவரா? அவர் கருப்புப் பணத்தைப் பதுக்கவில்லையா? அவர் அரசியலுக்கு வந்தால் ஊழல் செய்ய மாட்டாரா?" என ஜேம்ஸ் வசந்தன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் ஜேம்ஸ் வசந்தனை இணையத்தில் கடுமையாகச் சாடி வந்தனர். கார் கண்ணாடி உடைக்கப்பட்ட புகைப்படத்தை Facebook-ல் பகிர்ந்துள்ள ஜேம்ஸ் வசந்தன், "இது தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என்று தெரியவில்லை" என மிகக் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

Advertisement