'பெண்களை பகடைக்காய் ஆக்காதீர்கள்': த்ரிஷா விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினைக் வெளுத்துவாங்கிய சின்மயி, குஷ்பூ
செய்தி முன்னோட்டம்
தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நதிநீர் போராட்டத்தின் போது, நடிகை த்ரிஷாவைக் குறிப்பிடும் வகையில் இரட்டை அர்த்தத்தில் அவதூறாக பேசியதாக எழுந்த புகாரில், தமிழக எதிர்க்கட்சித தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு பிரபல பாடகி சின்மயி மற்றும் நடிகையும் பாஜக தலைவருமான குஷ்பூ சுந்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளமான X-இல் கருத்து பதிவிட்டுள்ள பாடகி சின்மயி, "அரசியலில் இருக்கும் ஆண்கள் தங்களின் அரசியல் மோதல்களுக்கு சம்பந்தமே இல்லாத பெண்களை இழுக்காமல், பொதுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தினால் அதுவே சிறந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கண்டனம்
சின்மயி கடும் கண்டனம்
மேலும் சின்மயி, "ஆரம்பத்தில் உதயநிதி பேசியதன் பின்னணி அர்த்தம் எனக்குப் புரியவில்லை, பின்னர் ஒருவர் விளக்கிய பிறகே தெரிந்தது. கூட்டத்தினர் கூச்சலிட்ட போது அவர்களை அமைதிப்படுத்த வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர், அதைவிட மோசமான ஒரு வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்".
"மூத்த தலைவர்களின் ஆபாச பேச்சுகள் இயல்பான ஒன்றாக மாற்றப்பட்ட நிலையில், இளம் தலைவர்களிடம் இருந்து நல்ல முன்னுதாரணத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது" என்றும் அவர் சாடியுள்ளார்.
குஷ்பூ
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க குஷ்பூ கோரிக்கை
பாஜக தலைவரும் நடிகையுமான குஷ்பூ சுந்தர் வெளியிட்ட பதிவில், உதயநிதி ஸ்டாலினின் பேச்சு "மலிவானது மற்றும் பெண்களை இழிவுபடுத்தக்கூடியது" எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.
"அரசியல் வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும் பொது வெளியில் பெண்களுக்கு அளிக்கப்படும் கண்ணியம் காக்கப்பட வேண்டும். பெண்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். பொது மேடையில் ஒரு பெண் நடிகரை இழிவுபடுத்திப் பேசியதற்காக உதயநிதி ஸ்டாலின் த்ரிஷாவிடம் பகிரங்கமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்" என குஷ்பூ வலியுறுத்தியுள்ளார்.
கைது
வழக்கும், கைது நடவடிக்கையும்
இதனிடையே, பெண்களின் கண்ணியத்தைக் காயப்படுத்துதல் மற்றும் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்படும் வேளையில் இத்தலைவர்களின் கண்டனங்கள் வெளியாகியுள்ளன.
"யாரைப் பற்றியும் தவறாகப் பேசவில்லை, முதலமைச்சரின் பெயரைத் தவிர வேறு யார் பெயரையும் குறிப்பிடவில்லை" என உதயநிதி ஸ்டாலின் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.