LOADING...
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 09, 2025
06:39 pm

செய்தி முன்னோட்டம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 9 க்கு எதிராகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி (தவாக) சார்பில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) போராட்டம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் சில உரையாடல்கள் மற்றும் காட்சிகள் குடும்பத்துடன் பார்க்க முடியாத அளவுக்கு உள்ளன என்றும், சமூக மதிப்புகளைப் பாதிப்பதாகவும் பரவலாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பிக் பாஸ் சீசன் 9 இல் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ள நிலையில், நிகழ்ச்சியின் உள்ளடக்கம் குறித்துச் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

வேல்முருகன்

தவாக தலைவர் வேல்முருகன் கண்டனம் 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள், இந்த நிகழ்ச்சி இளம் தலைமுறையின் மனநிலையைப் பாதிப்பதாகவும், தனிப்பட்ட உணர்ச்சிகள் மற்றும் குடும்ப உறவுகளை பொது வெளியில் வெளிப்படுத்துவது சமூக நாகரிகத்துக்கு எதிரானது என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரது அறிவிப்பின் பேரில், வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் அணி ஞாயிற்றுக்கிழமை சென்னை குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும், குடும்ப மதிப்புகளைக் காப்போம், பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்க போன்ற கோஷங்களை எழுப்பிப் பெண்கள் அதிக அளவில் பங்கேற்றனர். போராட்டத்தின் காரணமாக, குத்தம்பாக்கம் பகுதியிலும், நிகழ்ச்சி நடக்கும் இடத்திலும் சட்டம் ஒழுங்கைப் பேண நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விளக்கம்

தொலைக்காட்சி சார்பில் விளக்கம்

இதற்கிடையில், விஜய் டிவி தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில், பிக் பாஸ் நிகழ்ச்சி விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் நடைபெறுகிறது என்றும் எதுவும் அநாகரீகமாக ஒளிபரப்பப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மக்கள் கலாச்சாரம் மற்றும் மதிப்புகளுக்கு எதிராக உள்ளதாகக் கருதும் இதுபோன்ற நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல அரசியல் வட்டாரங்களும் வலியுறுத்துகின்றன. இந்த போராட்டம் எதிர்வரும் நாட்களில் மேலும் வலுப்பெறும் வாய்ப்புள்ளது.