
கோலாகலமாகத் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் 9; வெற்றியாளருக்கு பரிசுத்தொகை ₹1 கோடியா?
செய்தி முன்னோட்டம்
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் 9வது சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த சீசனின் வெற்றியாளருக்கு ₹1 கோடி ரொக்கமாக வழங்கப்படும் என்ற தகவல் பரவலாகப் பேசப்பட்டு வருவதே இந்த எதிர்பார்ப்புக்கு முக்கியக் காரணமாகும். இந்த தகவல் தற்போதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இது உறுதி செய்யப்பட்டால், பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே இதுவே மிகப்பெரிய பரிசுத் தொகையாக இருக்கும். 2017இல் நிகழ்ச்சி தொடங்கியபோது, வெற்றியாளருக்கு ₹50 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. ஆரம்ப கால வெற்றியாளர்களான ஆரவ் மற்றும் ஆரி அர்ஜுனன் உள்ளிட்டோருக்கு இதே தொகை வழங்கப்பட்டது. எனினும், நிகழ்ச்சியின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக, பரிசுத்தொகை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.
அசீம்
அசீமிற்கு பரிசுத்தொகை உயர்வு
ஆறாவது சீசனின் வெற்றியாளர் முகமது ஆசீம் ₹60 லட்சத்திற்கும் மேல் பரிசு பெற்றதாகக் கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, இந்த ஒன்பதாவது சீசனுக்கான ரொக்கப் பரிசு ₹1 கோடியாக உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, இந்நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் லாபகரமான தளங்களில் ஒன்றாக வளர்ந்திருப்பதைக் காட்டுகிறது. இந்தச் சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். கடந்த சீசன் 8இல் இருந்து கமல்ஹாசன் விலகிய பின், விஜய் சேதுபதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். விஜய் சேதுபதியின் நட்சத்திர மதிப்பு உயர்ந்து வருவதைக் குறிக்கும் வகையில், இந்த சீசனுக்காக அவரது தொகுப்பாளர் கட்டணம் ₹75 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதுவே கடந்த சீசனில் ₹60 கோடி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.