
பிக் பாஸ் தமிழ் 9 கோலாகல தொடக்கம்; வாட்டர்மெலன் ஸ்டார் பேசியதுதான் ஹைலைட்
செய்தி முன்னோட்டம்
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், விஜய் டிவியில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) தொடங்கியது. வழக்கம்போல், இந்த சீசனிலும் வித்தியாசமான போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். முதல் நாள் எபிசோடு ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த சீசனைப் பற்றிய விமர்சனங்களும் சமூக ஊடகங்களில் சூடுபிடித்துள்ளன. முதலாவதாக, சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் வீட்டிற்குள் நுழைந்தார். நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே தொகுப்பாளர் விஜய் சேதுபதியுடன் ஜாலியாகப் பேசினார் திவாகர். இந்த சீசனுக்குத் தேவையான கன்டென்ட்டை இவர் கொடுப்பார் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புவதோடு, முதல் நாளே இவர் ட்ரெண்டாகியுள்ளார்.
மருத்துவமனை
குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை
டைட்டிலை வென்றால், மக்களுக்குக் குறைந்த விலையில் சிகிச்சை அளிப்பதற்காக ஒரு பெரிய மருத்துவமனை கட்டுவேன் என்று திவாகர் கூறியது பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. பிரபல இயக்குநரும் நடிகருமான பிரவீன் காந்தி உள்ளிட்ட மற்ற போட்டியாளர்களும் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். போட்டியாளர்களின் தேர்வுகள் சுவாரஸ்யமாக இருப்பதாக ஒருபுறம் ரசிகர்கள் கருத்து தெரிவித்தாலும், மறுபுறம் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களை அடையாளம் தெரியவில்லை என்றும் சிலர் விமர்சித்துள்ளனர். இந்த சீசனில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் இன்னொரு விஷயம், பிக் பாஸ் வீட்டின் பிரமாண்ட வடிவமைப்பு ஆகும். இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமாகவும், ஆடம்பரமான வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ள வீட்டைப் பார்த்து விஜய் சேதுபதியே வியந்து பாராட்டியுள்ளார்.