காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி தான், இருந்தாலும்.. : பாலிவுட் நடிகர் அனுபம் கேர்
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி அடைந்த நடிகர் அனுபம் கெர், தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த திரைப்படமாக அங்கீகரிக்கப்பட்டதால், இந்த வெற்றி கூடுதல் சிறப்பு வாய்ந்தது என்று கூறினார். அதோடு, கேதன் மேத்தா தலைமையிலான நடுவர் குழுவிற்க்கு தனது நன்றிகளையும் தெரிவித்தார் அனுபம் கெர். அவர் கூறியதாவது, "இத்திரைப்படம் தேசிய விருதை வெல்லும் என நாங்கள் நம்பினோம். ஏனென்றால் நீங்கள் உங்கள் வேலையை சிறப்பாக செய்யும்போது, நல்ல விஷயங்கள் தானாக நடக்கும். ஆனால், இந்த பிரிவில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை". 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தற்போது இந்தியாவில் இல்லை என்பதால் அவர் சார்பாக, அனுபம் கேர் இதனை தெரிவித்தார்.
"படத்திற்கு எழுந்த விமர்சனங்களுக்கு பதில்"
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் வெளியான போது நாடு முழுவதும் பல விமர்சனங்கள் எழுந்தது. காஷ்மீரில் நடந்த மதக்கலவரத்தை பற்றி இந்த திரைப்படம் சித்தரித்தது. விருது கிடைத்ததும், இது பற்றி அனுபம் கேர், "இந்தத் திரைப்படத்தின் நோக்கத்தை சந்தேகித்த ஒவ்வொருவருக்கும் இந்த தேசிய விருது பதில் அளித்துள்ளது" எனத்தெரிவித்தார். எனினும், இந்த படத்திற்காக தனக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்ற வருத்தம் தனக்குள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "அதற்காக வெற்றி பெற்றவர்களை குறை கூறுவது என அர்த்தமல்ல. அல்லு அர்ஜுன் (சிறந்த நடிகர் ), பங்கஜ் திரிபாதி (சிறந்த துணை நடிகர்) இருவருமே மிகவும் திறமைசாலிகள், அனைத்து பாராட்டுகளுக்கும் அங்கீகாரத்திற்கும் தகுதியானவர்கள்" எனக்கூறினார் அனுபம் கேர்.