ரசிகர்களை நிச்சயம் பெருமைப்படுத்துவேன்; கார் பந்தய விபத்துக்குப் பிறகு தல அஜித் கொடுத்த உருக்கமான வாக்குறுதி
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமார், விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டே, கார் பந்தயத்திலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவர் தனது சொந்த அஜித்குமார் ரேஸிங் (Ajith Kumar Racing) அணியுடன் சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், தற்போது துபாயில் நடைபெற்று வரும் '24 ஹெச் சீரிஸ் - மத்திய கிழக்கு டிராபி' (24H Series - Middle East Trophy) பந்தயத்தில் அவரது அணி கலந்து கொண்டுள்ளது.
விபத்து
பந்தயத்தில் ஏற்பட்ட விபத்து
இந்த பந்தயத்தின் போது, அஜித்குமார் அணியின் கார் திடீரென விபத்துக்குள்ளானது. என்ஜின் கோளாறு காரணமாக கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காரை ஓட்டிச் சென்ற வீரர் அயர்டன் ரெடான்ட் துரிதமாகச் செயல்பட்டு, காரை உடனடியாக நிறுத்திவிட்டு வெளியே குதித்ததால் உயிர் தப்பினார். பின்னர் தீயணைப்பு உபகரணங்கள் மூலம் தீ அணைக்கப்பட்டது. இதற்கு முன்பும் அஜித்தின் ரேஸிங் கார்கள் சில விபத்துகளைச் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள்
ரசிகர்களுக்காக அஜித்தின் உருக்கமான பேச்சு
இந்த விபத்து காரணமாக, அஜித்தின் ரேஸிங் அணி பந்தயத்தில் முன்னிலை பெற முடியாமல் போனது. இது அங்கிருந்த ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தன்னை ஆதரிக்க வந்த ரசிகர்களுக்காக அஜித் ஒரு உருக்கமான செய்தியை வெளியிட்டுள்ளார். "என்னை ஆதரிக்கத் திரண்டு வந்த ரசிகர்கள், நான் ரேஸ் ஓட்டுவதையோ அல்லது எங்கள் அணி மேடையில் பரிசு வெல்வதையோ பார்க்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது." என்று அவர் தெரிவித்துள்ளார்.
நல்ல காலம்
நல்ல காலம் காத்திருக்கிறது
மேலும் அவர் தனது ரசிகர்களுக்கு ஒரு சத்தியம் செய்துள்ளார். "என் ரசிகர்களுக்கு நான் சத்தியம் செய்கிறேன், நல்ல காலம் வெகு தொலைவில் இல்லை. எங்கள் அணி நிச்சயம் ஒருநாள் உங்களைச் சர்வதேச அளவில் பெருமைப்படுத்தும்" என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். அஜித்தின் இந்த உருக்கமான பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரேஸிங் விபத்து நடந்தாலும், துவண்டு போகாமல் அவர் கொடுத்த இந்த வாக்குறுதி ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.