அரசியல்வாதி மகனுடன் திருமணமா? நடிகை மேகா ஆகாஷின் தாய் விளக்கம்
கோலிவுட்டில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் மூலம் பிரபலமான நடிகை மேகா ஆகாஷுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி பரவி வந்தது. நடிகை மேகா ஆகாஷ் பிரபல அரசியல்வாதியின் மகனை திருமணம் செய்துகொள்ள போவதாக கூறப்பட்டது. மேலும் சமூக வலைதளங்களில், அந்த அரசியல்வாதியின் மகன் யார் என நெட்டிசன்களும் இது குறித்து ஏதேனும் செய்திகள் கிடைக்குமா என தோண்ட தொடங்கிவிட்டனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை மேகா ஆகாஷின் தாய் ட்விட்டர் பதிவில் விளக்கியுள்ளார். "பிரபல அரசியல்வாதியின் மகனுடன் தனது மகளுக்கு திருமணம் என்ற செய்தி முழுக்க முழுக்க வதந்தி" என்று தெரிவித்துள்ளார்.
தயவு செய்து பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என வேண்டுகோள்
"அதில் உண்மை எதுவும் இல்லை என்றும், மேகா ஆகாஷின் திருமணத்தை முடிவு செய்தவுடன் முறைப்படி நாங்களே அதிகாரபூர்வமாக அறிவிப்போம்" என்றும் மேலும் தெரிவித்துள்ளார். "மேகா நடிச்ச படங்களோட ரிலீஸ் அப்பக் கூட இத்தனை பேர் கால் பண்ணிப் பேசினது இல்ல. மேகாவுக்கு கல்யாணமான்னு கேட்டு நிறைய போன் கால்ஸ் வருது" என்று கூறியுள்ளார். கடைசியாக, தயவு செய்து யாரும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் பதிவிட்டுள்ளார். நடிகை மேகா ஆகாஷ் தமிழில் 'மழை பிடிக்காத மனிதன்' என்ற படத்திலும், 2 தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். மேகா ஆகாஷின் இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. 'BOO' என்ற திரைப்படம் சமீபத்தில் ஜியோ சினிமாவில் வெளியானது குறிப்பிடத்தக்கது.