தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் செந்திலின் 72 வது பிறந்தநாள் இன்று
1951 -இல் ராமநாதபுரம் மாவட்டத்தில், முனுசாமியாக பிறந்தவர் தான் நடிகர் செந்தில். 'அப்பாவின் திட்டுக்கும், அடிக்கும் பயந்து, ஊரை விட்டு ஓடி வந்தேன்' என அவர் பேட்டிகளில் கூறியுள்ளார். அப்படி 'மெட்ராஸ்'-இற்கு வந்தவர், எண்ணெய் செக்கு கடையிலும், அதன் பின்னர், தனியார் மது கடையில் வெயிட்டராகவும் பணிபுரிந்துள்ளார். ஆனாலும், சினிமாவின் மீது அவர் கொண்ட மோகத்தால், அவ்வப்போது நாடகங்களில் நடித்து வந்துள்ளார். அந்த மூலம் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தலைகாட்டியவர், 'மலையூர் மம்பட்டியான்' படம் மூலம் பரவலாக அறியப்பட்டார். சினிமாவில் சாதித்த பிறகே ஊருக்கு செல்ல வேண்டும் என்ற வைராக்கியத்தோடு இருந்தவர், இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து தன் ஊருக்கு சென்றபோது, ஊரே ஆனந்தமாக வரவேற்றது.
வெற்றிக்கூட்டணியான செந்தில்-கவுண்டமணி ஜோடி
செந்தில்-கவுண்டமணி இணை, பல வெற்றி படங்களை தந்துள்ளது. 'வாழைப்பழ' காமெடி இன்றும் பலரால் ரசிக்கப்படுகிறது. பல படங்கள், இவர்கள் ஜோடி இருந்ததால் மட்டுமே வெற்றி கண்ட கதைகளும் உண்டு. அதேபோல, இவர்கள் இருவரின் கால்ஷீட்டிற்காக, பல பட தயாரிப்பாளர்கள் காத்திருந்த காலமும் உண்டு. ஒரு காலத்தில், ஒரே நாளில் 4,5 படங்களின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளும் அளவிற்கு பிஸியான நடிகராக விளங்கினார் செந்தில். ரஜினிகாந்திற்கு மிகவும் பிரியமான காமெடி நடிகர் என செய்திகள் தெரிவிக்கிறது. அதனால்தான், அருணாச்சலம், வீரா, முத்து போன்ற படங்களில் இவரை நடிக்கவைத்ததாகவும் செய்திகள் உண்டு. திரைப்படங்கள் மட்டுமல்லாது, அரசியலிலும் ஈடுபட்டுள்ளார் செந்தில். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு வரை, அதிமுக-வின் ஸ்டார் பேச்சாளராக இருந்துள்ளார்.