
மூணாறில் படப்பிடிப்பின் போது விபத்து: நடிகர் ஜோஜு ஜார்ஜ் காயமடைந்தார்
செய்தி முன்னோட்டம்
மூணாறு அருகே லக்கம் பகுதியில் நடைபெற்று வந்த 'வரவு' மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஜீப் விபத்தில் சிக்கி காயமடைந்தார். இந்த விபத்தில், அவருடன் பயணித்த நடிகர் தீபக் பரம்போல் மற்றும் ஒரு ஸ்டண்ட்மேன் உட்பட சிலருக்கும் காயம் ஏற்பட்டது. சனிக்கிழமை, படக்குழுவினர் ஜீப் சாகசக் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வாகனம் கவிழ்ந்ததால் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து நடந்தபோது, படத்தின் இயக்குனர் ஷாஜி கைலாஸ் உடனிருந்தார். உடனடியாக காயமடைந்த அனைவரும் மூணாறில் உள்ள டாடா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
விவரங்கள்
விபத்து விவரங்கள்
மருத்துவமனை வட்டாரங்களின்படி, ஜோஜு ஜார்ஜ் மற்றும் மற்றவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் பெரிய அளவிலானவை அல்ல என்றும், அவர்கள் அனைவரும் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. ஷாஜி கைலாஸ் மற்றும் ஜோஜு ஜார்ஜ் முதன்முறையாக இணையும் படம் 'வரவு' என்பது குறிப்பிடத்தக்கது. இந்த த்ரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜுஜு ஜார்ஜ் தமிழில், ஜகமே தந்திரம், தக் லைஃப் மற்றும் ரெட்ரோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.