துள்ளுவதோ இளமை நடிகர் அபிநய் காலமானார்: சக கலைஞர்கள் இரங்கல்
செய்தி முன்னோட்டம்
நடிகர் தனுஷுடன் இணைந்து துள்ளுவதோ இளமை (2002) திரைப்படத்தில் அவரது நண்பராக நடித்து பிரபலமான நடிகர் அபிநய், திங்கட்கிழமை (நவம்பர் 10) அதிகாலை 4 மணியளவில் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற அபிநய், அதைத் தொடர்ந்து சிங்கார சென்னை, ஜங்ஷன் போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். பின்னர் அவர் என்றென்றும் புன்னகை, ஆறுமுகம் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்ததுடன், விஜயின் துப்பாக்கி திரைப்படத்தில் வில்லனுக்குக் குரல் கொடுத்தும் பிரபலமானார்.
வீடியோ
உதவி கேட்டு வெளியான வீடியோ
பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கல்லீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக நிதி உதவி கேட்டு அபிநய் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவைப் பார்த்துப் பலரும் அவருக்கு உதவியதுடன், குறிப்பாகக் கேபிஒய் பாலா நேரடியாகச் சென்று ஒரு லட்ச ரூபாய் வழங்கினார். அப்போது பாலாவிடம் அபிநய் கண்ணீர் சிந்திய காட்சிகள் அனைவரையும் நெகிழச் செய்தன. மேலும், நடிகர் தனுஷும் அபிநய்யின் உடல்நிலை அறிந்து மருத்துவச் செலவுக்கு உதவியுள்ளார். சமீபத்தில் பாலா தனது திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்குக் கூட அபிநய்யை அழைத்துச் சிறப்புரையாற்றச் செய்திருந்தார். இந்தச் சூழ்நிலையில், நடிகர் அபிநய் இன்று காலமான செய்தி, அவரது நண்பர்கள் மற்றும் திரையுலகினருக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.