தொடர்ந்து இரண்டாவது மாதமாக எதிர்மறையாகவே பணவீக்கம் நீடிப்பு: மத்திய அரசு தரவுகள் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் மொத்த விலைக் குறியீட்டு (WPI) அடிப்படையிலானப் பணவீக்கம், நவம்பர் 2025 மாதத்திலும் தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக எதிர்மறை மண்டலத்திலேயே நீடித்தது. இதுப் பணவீக்கம் குறித்தக் கவலைகளை மேலும் குறைக்கும் விதமாக அமைந்தது. அரசாங்கம் திங்களன்று (டிசம்பர் 15) வெளியிட்டத் தரவுகளின்படி, மொத்த விலைக் குறியீட்டுப் பணவீக்கம் அக்டோபரில் -1.21% ஆக இருந்த நிலையில் இருந்து சற்றுக் குறைந்து, நவம்பரில் -0.32% ஆகப் பதிவானது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மொத்த விலைப் பணவீக்கம் 2.16% ஆக இருந்ததைக் காட்டிலும் இது மிகக் குறைவாகும்.
எதிர்மறை
பணவீக்கம் ஏன் எதிர்மறையிலேயே இருந்தது?
சில உணவுப் பொருட்களான பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளின் விலைகள் மாதாந்திர அடிப்படையில் அதிகரித்த போதிலும், ஒட்டுமொத்த WPI பணவீக்கம் எதிர்மறையிலேயே நீடித்ததற்குப் பலக் காரணங்கள் உள்ளன. தொழிற்துறை அமைச்சகத்தின்படி, உணவுப் பொருட்கள், கனிம எண்ணெய்கள், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, அடிப்படை உலோகங்கள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் விலைகள் ஆண்டுக் கணக்கில் குறைவாக இருந்ததே இதற்குக் காரணம். இந்தப் பிரிவுகள் மொத்த விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவின. உணவுப் பொருட்களின் விலைக் குறைவு ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து எட்டு மாதங்களாக நீடித்து வருகிறது. இருப்பினும், நவம்பர் மாதத்தில் இந்த விலைக் குறைவின் வேகம் வெகுவாகக் குறைந்தது.
ஆர்பிஐ
ரிசர்வ் வங்கி கொள்கை
உணவுப் பொருட்களின் விலைக் குறைவு விகிதம் அக்டோபரில் 8.31% ஆக இருந்த நிலையில் இருந்து, நவம்பரில் 4.16% ஆகக் குறைந்தது. இதேபோல, எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவிலும் விலைக் குறைவு 2.27% ஆக நீடித்தது. சில்லறை பணவீக்கம் நவம்பரில் 0.71% ஆக உயர்ந்த போதிலும், அது ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) இலக்கிற்குள் இருந்ததால், இந்தத் தொடர்ந்து வரும் குறைந்த பணவீக்கமானது ரிசர்வ் வங்கிக்கு வட்டி விகிதங்களை மேலும்க் குறைப்பதற்கானச் சலுகை அளித்துள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில், ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை 5.25% ஆகக் குறைத்ததுடன், பணவீக்கக் கணிப்பையும் 2% ஆகக் குறைத்துள்ளது. இது, வலுவான வளர்ச்சியுடன் கூடியக் குறைந்தப் பணவீக்கத்தின் அரியக் கலவையாகத் தற்போதையச் சூழல் இருப்பதாகக் கருதுவதையேக் குறிக்கிறது.