LOADING...
₹12,500 கோடி நிதி!! இந்தியாவின் மெகா திட்டத்திற்கு உலக வங்கி ஒப்புதல்
உலக வங்கி

₹12,500 கோடி நிதி!! இந்தியாவின் மெகா திட்டத்திற்கு உலக வங்கி ஒப்புதல்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 22, 2026
08:55 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் தனியார் துறையின் பங்களிப்புடன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கும் உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழு $1.5 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ₹12,500 கோடிக்கும் அதிகம்) நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் வரி எளிமைப்படுத்தல், வர்த்தக ஒருங்கிணைப்பு, ஒழுங்குமுறை மாற்றங்கள் மற்றும் வணிக சூழலை மேம்படுத்துதல் போன்ற கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேலும் வலுப்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று உலக வங்கி தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இளைஞர்கள்

11 மில்லியன் இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை மாற்றும் மெகா திட்டம்

தனியார் துறை மேம்பாட்டு கொள்கை நிதியுதவி (DPF) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த தொகையானது, அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் பணியாளர் சந்தையில் புதிதாக நுழையவிருக்கும் சுமார் 1.1 கோடி (11 மில்லியன்) இளைஞர்களுக்குத் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான சீர்திருத்தங்களுக்குப் பக்கபலமாக அமையும். தொழில் தொடங்குவதில் இருக்கும் தடைகளைக் குறைப்பது, வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடைமுறைகளை எளிமையாக்குவது மற்றும் நிறுவனங்களுக்குத் தேவையான மூலதனக் கடனுதவிகளை எளிதாகக் கிடைக்கச் செய்வதே இதன் பிரதான நோக்கமாகும்.

வேலைவாய்ப்பு வளர்ச்சி

இந்தியாவின் வேலைவாய்ப்பு வளர்ச்சியும் சரிந்த வேலையின்மை விகிதமும்

மத்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பானது கடந்த 2017-18 ஆம் ஆண்டில் 45.2 கோடியாக இருந்த நிலையில், 2023-24 ஆம் ஆண்டில் அது 60.4 கோடியாக உயர்ந்து, வெறும் ஆறு ஆண்டுகளில் 15 கோடிக்கும் அதிகமான புதிய வேலைகளை சேர்த்துள்ளது. இதே காலகட்டத்தில், நாட்டின் வேலையின்மை விகிதம் 6 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதாகக் கணிசமாகக் குறைந்துள்ளதுடன், சுமார் 90 லட்சம் பெண்கள் வழக்கமான ஊதியத்துடன் கூடிய முறையான வேலைவாய்ப்புகளில் இணைந்து சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

கிராமப்புற வேலைவாய்ப்பு

கிராமப்புறப் பெண்கள் மற்றும் சிறு தொழில்களுக்குக் கிடைக்கும் கூடுதல் பலம்

இந்த உலக வங்கியின் புதிய நிதியுதவியானது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், நலிவடைந்த சமூகங்களை சென்றடைவதிலும் கவனம் செலுத்துகிறது. உலக வங்கி குழுமத்தின் தனியார் துறை அங்கமான சர்வதேச நிதி நிறுவனம், இந்தியாவின் கிராமப்புற மற்றும் சிறு நகரங்களில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும், குறிப்பாக பெண் தொழில்முனைவோருக்கும் எளிதான கடன் வசதிகளை வழங்குவதற்காக ஏற்கனவே செய்து வரும் முதலீடுகளுக்கு இந்தத் திட்டம் மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

Advertisement