அக்டோபரில் UPI புதிய சாதனை: வரலாற்றிலேயே முதன்முறையாக நாளொன்றுக்கு ரூ. 1 லட்சம் கோடி பரிவர்த்தனை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை இடைமுகம் எனப்படும் யுபிஐ, கடந்த அக்டோபர் மாதத்தில் வரலாற்றிலேயே முதன்முறையாக நாளுக்கு சராசரியாக ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான பணப் பரிவர்த்தனைகளை கையாண்டு புதிய சாதனையைப் படைத்துள்ளது. NPCI வெளியிட்டுள்ள தரவுகளின்படி, பண்டிகை கால கொள்முதல்கள் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் யுபிஐ தளம் மூலம் 25.47 பில்லியன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.31.53 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. நாளொன்றுக்குச் சராசரியாக 82.2 கோடி பரிவர்த்தனைகள் வீதம், நாள்தோறும் ரூ.1.01 லட்சம் கோடி மதிப்பிலான தொகைப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் அக்டோபர் மாத பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 5.8% அதிகரித்துள்ளதுடன், அதன் மதிப்பு 7.4% உயர்ந்துள்ளது.
செயலிகள்
சந்தையை கைப்பற்றியுள்ள முன்னணி செயலிகள்
யுபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனைச் சந்தையில் போன்பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் ஆகிய மூன்று பிரதான செயலிகளே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன.
செப்டம்பர் தரவுகளின்படி, போன்பே 45.6% சந்தைப் பங்களிப்புடனும், கூகுள் பே 32.2% மற்றும் பேடிஎம் 8.1% சந்தைப் பங்களிப்புடனும் இயங்கி வருகின்றன.
இச்சேவைகள் இணைந்தே மொத்த சந்தையில் 86% பங்கைக் கொண்டுள்ளன.
இதனிடையே யுபிஐ நுகர்வோர் பரிவர்த்தனை சந்தையில் 33% பங்கைக் கைப்பற்ற இலக்கு வைத்துள்ளதாக பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா அறிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட வணிக பரிவர்த்தனைகள் மீது விதிக்கப்படவிருந்த MDR Charges தீபாவளி பண்டிகைக்குப் பிறகு அமல்படுத்தும் வகையில் NPCI குழு ஒத்திவைத்துள்ளது.
இது வணிகர்களுக்குப் பெரும் உதவியாக அமைந்துள்ளது.