NRI-களுக்கான அறிவிப்பு: பங்குச்சந்தை முதலீடு முதல் சொத்து விற்பனை வரை பட்ஜெட்டில் கூறியது என்ன?
செய்தி முன்னோட்டம்
இந்திய பொருளாதாரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் (NRI) பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று முக்கியமான சீர்திருத்தங்களை முன்மொழிந்துள்ளார். NRI-கள் உட்பட, இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் நபர்களுக்கான (PROI-கள்) முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் இணக்கத்தை எளிதாக்குவதற்கும் 2026 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய நடவடிக்கைகளை வெளியிட்டார். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை:
முதலீடு
பங்ச்சந்தை முதலீடும், TDS நடைமுறையும்
பங்குச்சந்தை முதலீட்டு வரம்பு உயர்வு: இந்திய நிறுவனங்களின் பங்குகளில் தனிநபர் ஒருவர் முதலீடு செய்வதற்கான வரம்பு (Portfolio Investment Scheme) 5%-லிருந்து 10%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு நிறுவனத்தில் ஒட்டுமொத்த வெளிநாட்டு தனிநபர் முதலீட்டாளர்களின் மொத்த வரம்பு 10%-லிருந்து 24%-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இந்திய பங்குச்சந்தைக்கு அதிக புழக்கத்தையும், நீண்ட கால மூலதனத்தையும் கொண்டு வரும் என நிபுணர்கள் கருதுகின்றனர். சொத்து வாங்குவதில் TDS நடைமுறை எளிமையாக்கம்: இதுவரை ஒரு NRI-யிடம் இருந்து சொத்து வாங்கும் போது, வாங்குபவர் TAN என்ற தனி கணக்கு எண்ணை பெற வேண்டியிருந்தது. இனிமேல், சாதாரண விற்பனையாளர்களிடம் சொத்து வாங்குவதைப் போலவே, உங்கள் PAN கார்டு அடிப்படையிலான சலானைப் பயன்படுத்தியே TDS தொகையை செலுத்தலாம்.
சொத்து
வெளிநாட்டு சொத்துக்களை பதிவு செய்ய சலுகை
மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இடம்பெயர்ந்த NRIகள் உள்ளிட்ட சிறிய வரி செலுத்துவோர், தானாக முன்வந்து வெளிநாட்டு சொத்துக்களை அறிவிக்கவும், வரி இணக்கத்தை முறைப்படுத்தவும் ஆறு மாத கால வெளிப்படுத்தல் காலத்தை நிதியமைச்சர் சீதாராமன் முன்மொழிந்தார். NRI-க்கள் வெளிநாடுகளில் தாங்கள் வைத்துள்ள சொத்துக்களை தானாக முன்வந்து வெளிப்படுத்த 6 மாத கால அவகாசம் (Disclosure Window) வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் அபராதமின்றித் தங்கள் வரி நடைமுறைகளை முறைப்படுத்திக் கொள்ள முடியும்.