ஊழியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது டிசிஎஸ் நிறுவனம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், சமீபத்தில் தங்கள் நிறுவனத்தின் பெரும்பாலான ஊழியர்களுக்கு, ஐந்து நாள் அலுவலகம் வந்து பணிபுரிவதை கட்டாயமாக்கியது.
வீட்டிலிருந்து பணிபுரியவே பெரும்பாலான ஊழியர்கள் விரும்பிய போதிலும், பல்வேறு பிரச்சினைகளைக் கடந்து, ஊழியர்கள் அலுவலகம் வந்து பணிபுரிவதை கட்டயாமாக்கியிருக்கிறது டிசிஎஸ்.
தற்போது இதனைத் தொடர்ந்து, அலுவலகம் வரும் ஊழியர்கள் தாங்கள் உடுத்தும் உடை விஷயத்திலும் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து புதிய மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருக்கிறது அந்நிறுவனம்.
அந்த மின்னஞ்சலில் என்னென்ன விதமான உடைகளை அலுவலகத்திலும், அலுவலகம் சார்ந்த வெளி நிகழ்வுகளில் பங்கெடுக்கும் போதும், ஊழியர்கள் உடுத்தலாம் என்பது குறித்த பட்டியலை அளித்திருக்கிறது அந்நிறுவனம்.
டிசிஎஸ்
என்ன விதமான ஆடைக் கட்டுப்பாட்டை அறிவித்திருக்கிறது டிசிஎஸ்?
டிசிஎஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சிகள் பங்கெடுக்கும் போது, நிறுவனம் சார்ந்த சந்திப்புகள், அழைப்புகளில் பங்கெடுக்கும் போதும், நிறுவனத்தின் சார்பில் வெளி நபர்களை சந்திக்கும் போதும் இந்த ஆடைக் கட்டுப்பாட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது அந்நிறுவனம்.
ஆண்களுக்கு கண்களை உறுத்தாத வகையிலான நிறங்களில் முழுக்கை மற்றும் அரைக்கை சட்டைகள், ஃபார்மல் பேண்ட்கள், ஜீன்ஸ், காலர் வைத்த டி-சர்ட்கள் மற்றும் ஃபார்மல் ஷூக்கள் அணியலாம் என தங்களுடைய அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறது டிசிஎஸ் நிறுவனம்.
அதேபோல் பெண்களுக்கு, சேலை, சல்வார், குர்திஸ், முழுங்கால் அளவுடைய குர்தா, சட்டைகள், ஃபார்மல் பேண்ட்கள் மற்றும் ஃபார்மல் ஷூக்களை அணியலாம் எனக் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.