Loading...
தமிழ்நாட்டின் கடன் 21% குறைப்பு: உண்மையான நிதி ஒழுக்கமா அல்லது தற்காலிகத் தள்ளிவைப்பா?
தமிழ்நாட்டின் கடன் 21% குறைப்பு

தமிழ்நாட்டின் கடன் 21% குறைப்பு: உண்மையான நிதி ஒழுக்கமா அல்லது தற்காலிகத் தள்ளிவைப்பா?

எழுதியவர் Sekar Chinnappan
Oct 19, 2026
08:03 am

செய்தி முன்னோட்டம்

2026-27 நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) தமிழ்நாடு அரசு மாநில அரசுப் பத்திரங்கள் மூலம் பெற்ற கடன் அளவு 21% குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் ₹51,300 கோடியாக இருந்த கடன் தொகை, நடப்பு நிதியாண்டில் ₹40,500 கோடியாக சரிந்துள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் அதிகக் கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்கு இறங்கியுள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் தமிழ்நாட்டை விட அதிக கடன் பெற்று முதல் நான்கு இடங்களில் உள்ளன.

காரணங்கள்

முதல் பாதியில் கடன் குறைய பிரதான காரணங்கள்

நிதியாண்டின் தொடக்கத்தில் ஜிஎஸ்டி மற்றும் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் சீராக இருந்ததும், மத்திய அரசிடமிருந்து கிடைத்து வந்த வரிப் பங்கீடு தடையின்றி வந்ததும் உடனடி கடன் தேவைகளைக் குறைத்துள்ளன.

அத்துடன், வழக்கமாக நிதியாண்டின் முதல் பாதியில் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் நிதியளிப்பு மற்றும் மூலதன செலவினங்கள் மெதுவாகவே நடைபெறும் என்பதால், மாநில அரசு கடன் திரட்டுவதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.

இதன் காரணமாகவே முதல் இரண்டு காலாண்டுகளில் கடன் அளவு கட்டுக்குள் இருந்தது.

இரட்டிப்பு

மூன்றாம் காலாண்டில் கடன் அளவை இரட்டிப்பாக்கத் திட்டம்

முதல் பாதியில் கடன் குறைந்தபோதிலும், நிதியாண்டின் இரண்டாம் பாதியில் கடன் பெறலை அதிகரிக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் ₹48,000 கோடி கடன் திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது இரண்டாம் காலாண்டில் பெற்ற ₹23,500 கோடியை விட இரு மடங்கு அதிகமாகும்.

இந்த காலக்கட்டத்தில் இந்திய மாநிலங்கள் மொத்தமாகத் திரட்டவுள்ள ₹3.61 லட்சம் கோடி கடனில் தமிழ்நாட்டின் பங்கு மட்டும் 13% என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

தற்காலிக நடவடிக்கை

நிதிச் சீர்திருத்தமா அல்லது தற்காலிகத் தள்ளிவைப்பா?

எஸ்பிஐகேப்ஸ் அறிக்கையின் தரவுகளின்படி, தமிழ்நாடு அரசு தனது கடன் தேவைகளை நிதியாண்டின் இரண்டாம் பாதிக்குத் தள்ளிவைக்கும் உத்தியையே கையாண்டுள்ளது.

மழைக்காலத்திற்குப் பிறகான வளர்ச்சிப் பணிகள் மற்றும் பண்டிகை காலச் செலவுகள் காரணமாக நிதியாண்டின் பிற்பாதியில்தான் பணத்தேவை அதிகமாக இருக்கும்.

எனவே, இது முழுமையான நிதிச் சீர்திருத்தம் என்பதை விட, வரவிருக்கும் செலவினங்களுக்கு ஏற்பத் திட்டமிடப்பட்ட ஒரு தற்காலிகக் ரொக்க மேலாண்மை நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT