இலவச பயனாளர்களுக்கான வசதிகளைக் குறைக்கும் ஸ்பாட்டிஃபை
இந்தியாவில் பிரபலமான மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவைகளுள் ஒன்றாக விளங்கும் ஸ்பாட்டிஃபை (Spotify) இலவச பயனாளர்களுக்கான சில வசதிகளைக் குறைத்திருக்கிறது. குறிப்பிட்ட வரிசையில் பாடல்களைக் கேட்பது, ஒரே பாடலை மீண்டும் ரிபீட் செய்வது, முந்தைய பாடலுக்குச் செல்வது மற்றும் ஒரு பாடலின் குறிப்பிட்ட பகுதிக்கு நேரடியாகச் சென்று கேட்பது உள்ளிட்ட வசதிகளை இலவச பயனாளர்களுக்கு பயன்பாட்டில் இருந்து நீக்குகிறது ஸ்பாட்டிஃபை. இந்தியாவில் சந்தா செலுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கையை உயர்ந்த இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். இலவச பயனாளர்கள் ஒரு பாட்டை மீண்டும் கேட்க வேண்டுமென்றால், நம்முடைய பிளேலிஸ்டுக்கு சென்று அந்தக் குறிப்பிட்ட பாட்டை மீண்டும் தேர்ந்தெடுத்து தான் இனி கேட்க முடியுமாம்.
இந்தியாவில் ஸ்பாட்டிஃபையின் திட்டம்:
இந்தியாவில் தனிநபர் ஸ்பாட்டிஃபை கணக்கிற்கு ஒரு நாளுக்கு ரூ.7-ல் இருந்து மாதத்திற்கு ரூ.119 வரையிலான திட்டங்களை வழங்குகிறது ஸ்பாட்டிஃபை. இந்தியாவில் ஸ்பாட்டிஃபையின் போட்டியாளர்களான கானா மற்றும் ரெஸ்ஸோ உள்ளிட்ட தளங்கள் அனைத்தையும் சந்தா செலுத்தி மட்டுமே பயன்படுத்த முடிகிற நிலையில், இலவசமாகவும் சில வசதிகளை மட்டும் தவிர்த்து விட்டு சேவை வழங்கி வந்தது ஸ்பாட்டிஃபை. இந்நிலையில் இந்தியாவில் தங்களது வருவாயைப் பெருக்க மேற்கூறிய நடவடிக்கையை எடுத்திருக்கிறது அந்நிறுவனம். ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிற நாடுகளில் தங்களது சேவையின் சந்தா விலையை உயர்த்திய நிலையில், இந்தியாவில் அப்படியான நடவடிக்கைகளில் ஸ்பாட்டிஃபை ஈடுபடவில்லை. 2019ம் ஆண்டு இந்தியாவில் நுழைந்த ஸ்பாட்டிஃபை நிறுவனத்தின் வருவாயில் 87% சந்தா மூலம் மட்டுமே பெறப்படுவது குறிப்பிடத்தக்கது.