வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட விலை; இந்த நேரத்தில் வெள்ளி வாங்குவது நல்லதா?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் வெள்ளி விலை திங்கட்கிழமை (டிசம்பர் 29) புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கடும் தட்டுப்பாடு மற்றும் தொழில் துறைத் தேவை அதிகரிப்பு காரணமாக, இந்த ஆண்டு வெள்ளியின் விலை தங்கம் விலையை விட மிக வேகமாக உயர்ந்துள்ளது. உலகளாவிய சந்தையில், வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ் 80 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் இது 83.62 டாலர் என்ற நிலையை எட்டி புதிய சாதனை படைத்தது. இந்த ஆண்டில் மட்டும் வெள்ளி சுமார் 181 சதவீத உயர்வைக் கண்டுள்ளது. சோலார் பேனல்கள், எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு மற்றும் அமெரிக்காவின் முக்கிய கனிமங்கள் பட்டியலில் வெள்ளி சேர்க்கப்பட்டது போன்ற காரணங்களே இந்த அதிரடி உயர்வுக்குக் காரணமாகும்.
இந்திய நகரங்கள்
முக்கிய இந்திய நகரங்களில் இன்றைய விலை
இந்தியாவின் முக்கிய நகரங்களில் வெள்ளியின் விலை மாறுபட்டுள்ளது. குறிப்பாகத் தென் மாநிலங்களில் விலை மிக அதிகமாக உள்ளது. சென்னை, ஐதராபாத் மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் 10 கிராம் வெள்ளி ₹2,739, 100 கிராம் ₹27,390 மற்றும் 1 கிலோ ₹2,73,900 ஆக உள்ளது. மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் பெங்களூர் ஆகிய பகுதிகளில் 10 கிராம் ₹2,509, 100 கிராம் ₹25,090 மற்றும் 1 கிலோ ₹2,50,900 ஆக உள்ளது. உள்ளூர் வரிகள், போக்குவரத்துச் செலவுகள் மற்றும் தேவையைக் பொறுத்து நகரங்களுக்கு இடையே இந்த விலையில் சிறிய மாற்றங்கள் உள்ளன. மற்ற நகரங்களை விடச் சென்னையில் வெள்ளி விலை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி
வெள்ளி வாங்குவது நல்லதா?
மிக வேகமான விலை உயர்வால் தற்போது வெள்ளி வாங்குவது நல்லதா என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. வெள்ளி விலையானது தங்கத்துடன் ஒப்பிடும்போது அதிக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதனால், நீண்டகால முதலீட்டாளர்களுக்கு வெள்ளியில் முதலீடு செய்வது அதிக நன்மையைக் கொடுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, SIP போல முதலீடு செய்பவர்கள் விலை குறையும்போது வாங்கி சேர்ப்பது நல்ல பலனைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
தங்கம்
தங்கம் விலை நிலவரம்
வெள்ளி புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில், தங்கத்தின் விலையும் உயர்ந்தே காணப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் 4,527 டாலர் என்ற அளவில் உள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவதும், வட்டி விகிதக் குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகளுமே தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக முதலீட்டாளர்களால் பார்க்கப்படுகிறது. வெள்ளி ஒரு முதலீடாக மட்டுமின்றி, நவீனத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான உலோகமாகவும் இருப்பதால், அதன் விலை வரும் நாட்களிலும் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்று சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.