
ராஜேஷ்வர் ராவ் ஓய்வு; ஆர்பிஐயின் புதிய துணை ஆளுநராகச் சிரிஷ் சந்திர முர்மு நியமனம்
செய்தி முன்னோட்டம்
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) புதிய துணை ஆளுநராக, தற்போதைய செயல் இயக்குநரான சிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறைக்கு வரும். இவர், அக்டோபர் 8 ஆம் தேதியுடன் பதவிக் காலம் முடிவடையும் ராஜேஸ்வர் ராவிற்குக்குப் பதிலாகப் பொறுப்பேற்கவுள்ளார். ராஜேஸ்வர் ராவ் தனது பதவிக் காலத்தில், வங்கி ஒழுங்குமுறை (Banking Regulation) உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளைக் கவனித்து வந்தார். இதன் மூலம், முர்மு, மத்திய வங்கியின் உயர் பதவிகளில் ஒன்றில் அடியெடுத்து வைக்க உள்ளார். ஆர்பிஐயில் நான்கு துணை ஆளுநர்கள் உள்ளனர். இவர்கள் நாணயக் கொள்கை, வங்கி மேற்பார்வை மற்றும் நிதிச் சந்தை ஒழுங்குமுறை போன்ற முக்கியமான துறைகளைக் கையாள்கின்றனர்.
பொறுப்பு
சிரிஷ் சந்திர முர்முவிற்கான பொறுப்பு
சிரிஷ் சந்திர முர்மு, ராஜேஸ்வர் ராவ் வசம் இருந்த வங்கி ஒழுங்குமுறைத் துறை மற்றும் அதுசார்ந்த பிற பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தற்போது செயல் இயக்குநராகப் பணியாற்றும் சிரிஷ் சந்திர முர்மு, ஆர்பிஐயின் செயலகத் துறை மூலம், நிர்வாக விஷயங்கள், துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, ஒழுங்குமுறைக் கட்டுப்பாடு மற்றும் உள் நிர்வாகம் போன்ற உயர்மட்டப் பணிகளைச் செய்து வருகிறார்.
துணை ஆளுநர்கள்
இதர துணை ஆளுநர்கள்
மற்ற துணை ஆளுநர்களைப் பொறுத்தவரை டி.ரபி சங்கர் கட்டணம் மற்றும் தீர்வு முறைகள், ஃபின்டெக், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அந்நியச் செலாவணித் துறை போன்ற செயல்பாடு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பரந்த துறைகளை மேற்பார்வையிடுகிறார். சுவாமிநாதன் ஜானகிராமன் மேற்பார்வைத் துறை, நுகர்வோர் கல்வி மற்றும் பாதுகாப்புத் துறை, வைப்புத் தொகைக் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் போன்ற மேற்பார்வை மற்றும் வாடிக்கையாளர் சார்ந்த துறைகளை கவனித்து வருகிறார். பூனம் குப்தா பணவியல் கொள்கைத் துறை, பொருளாதார மற்றும் கொள்கை ஆய்வுத் துறை, நிதி நிலைத்தன்மைத் துறை மற்றும் சர்வதேசத் துறை உள்ளிட்ட மேக்ரோ பொருளாதாரக் கொள்கை மற்றும் மூலோபாயத் தகவல் தொடர்புகளைக் கவனித்து வருகிறார்.