டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பு கிடையாதா? செபி அறிக்கையில் சொல்லப்பட்டது இதுதான்
செய்தி முன்னோட்டம்
புதிய தலைமுறை முதலீட்டாளர்கள் மத்தியில் குறைந்த விலையில் (₹100 முதல்) தங்கம் வாங்க உதவும் டிஜிட்டல் தங்கம் (Digital Gold) அல்லது இ-தங்கம் தயாரிப்புகள் குறித்து முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனச் சந்தைக் கட்டுப்பாட்டாளரான செபி (SEBI) எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆன்லைன் தளங்கள் மூலம் விற்கப்படும் இந்தத் தயாரிப்புகள் செபியால் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்றும், இவை பத்திரங்களாகவோ அல்லது பண்டகப் பொருட்களாகவோ வகைப்படுத்தப்படவில்லை என்றும் செபி தெளிவுபடுத்தியுள்ளது. இந்த டிஜிட்டல் தங்கம், தங்க இ.டி.எஃப் (Gold ETF) அல்லது மின்னணுத் தங்க ரசீதுகள் (EGRs) போன்ற செபியால் கட்டுப்படுத்தப்படும் தங்க முதலீட்டுத் திட்டங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.
பாதுகாப்பு
சட்டப்பூர்வ பாதுகாப்பு
டிஜிட்டல் தங்கம் விற்பனை செய்யும் ஒரு தளம் நாளை முடங்கிப் போனால், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை இழக்க நேரிடலாம் என்றும், செபியின் முதலீட்டாளர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்களுக்குச் சட்டப்பூர்வமான பாதுகாப்பு கிடைக்காது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சாதாரணப் பயனர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கத்தை ஒரு செயலி மூலம் வாங்கும்போது, அதற்குச் சமமான தங்கம் ஒரு பாதுகாவலரிடம் வைக்கப்படுவதாக அந்த நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால், இந்தத் தங்கம் உண்மையில் இருக்கிறதா என்பதைத் தணிக்கை செய்யவோ அல்லது உறுதிப்படுத்தவோ சீரான விதிகள் எதுவும் இல்லை. மேலும், அந்தத் தளங்கள் திவாலானால் அல்லது டெலிவரி செய்வதில் தாமதம் ஏற்பட்டால், செபியால் உதவ முடியாது.
அறிவுரை
முதலீட்டாளர்களுக்கு அறிவுரை
மேலே குறிப்பிட்ட காரணங்களால், முதலீட்டாளர்கள் அதிகப் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட, செபியால் ஒழுங்குபடுத்தப்பட்ட தங்க இ.டி.எஃப் (ETFs) மற்றும் எலக்ட்ரானிக் கோல்ட் ரெசிப்ட்ஸ் (EGRs) போன்ற தயாரிப்புகளில் மட்டுமே முதலீடு செய்யுமாறு செபி அறிவுறுத்தியுள்ளது. இந்த எச்சரிக்கையை முதலீட்டாளர்கள் தீவிரமாகக் கருத்தில்கொண்டு, பாதுகாப்பற்ற முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். எனினும், இது டிஜிட்டல் தங்கத்தின் மீது தடை விதிப்பது என்று அர்த்தமல்ல. மாறாக, செபியின் கட்டுப்பாட்டின் கீழ் இது வராது என்பதால், முதலீடு செய்யும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையை முதலீட்டாளர்களுக்கு கொடுப்பதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.