ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி ஜூன் மாதத்தில் 34% உயர்ந்து புதிய சாதனை: சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாமிடம்
செய்தி முன்னோட்டம்
எனர்ஜி அண்ட் கிளீன் ஏர் ஆராய்ச்சி மையம் (CREA) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த ஜூன் மாதத்தில் அதற்கு முந்தைய மாதத்தை விட 34 சதவீதம் உயர்ந்து புதிய சாதனை அளவை எட்டியுள்ளது. ரஷ்யாவின் ஒட்டுமொத்த எண்ணெய் ஏற்றுமதி வருவாய் வீழ்ச்சியடைந்த போதிலும், இந்தியாவின் இந்த இறக்குமதி அசுர வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஜூன் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி 5.4 சதவீதம் அதிகரித்த நிலையில், முக்கிய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சென்ற ரஷ்ய கச்சா எண்ணெயின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
ரஷ்ய கச்சா எண்ணெய்
முன்னணி இந்திய சுத்திகரிப்பு நிலையங்களில் பன்மடங்கு உயர்ந்த ரஷ்ய கச்சா எண்ணெய்
இந்தியாவின் முன்னணி சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை வாங்குவதை மிகத் தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான ரஷ்ய எண்ணெய் விநியோகம் மே மாதத்தை விட 150 சதவீதம் எகிறியுள்ளது. இதேபோல், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் பாரதீப் சுத்திகரிப்பு நிலையத்தின் இறக்குமதி 126 சதவீதமும், பிபிசிஎல் கொச்சி சுத்திகரிப்பு நிலையத்தின் இறக்குமதி 83 சதவீதமும் உயர்ந்துள்ளன. நயாரா எனர்ஜியின் வாடினார் சுத்திகரிப்பு நிலையமும் 45 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது.
2வது பெரிய வாடிக்கையாளர்
உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக 2வது பெரிய வாடிக்கையாளரான இந்தியா
ஜூன் 2026ல் ரஷ்யாவின் புதைபடிவ எரிபொருட்களை வாங்கிய உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இம்மாத்ததில் இந்தியா மொத்தம் 5.5 பில்லியன் யூரோ மதிப்பிலான ரஷ்ய எரிபொருட்களை இறக்குமதி செய்துள்ளது. இதில் 83 சதவீதம், அதாவது 4.5 பில்லியன் யூரோ கச்சா எண்ணெய் மட்டுமே ஆகும். இதுதவிர 488 மில்லியன் யூரோ மதிப்பிலான எண்ணெய் தயாரிப்புகளும், 444 மில்லியன் யூரோ மதிப்பிலான நிலக்கரியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில் 7.3 பில்லியன் யூரோ கொள்முதலுடன் சீனா உலகளவில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
ஏற்றுமதி வருவாய் சரிவு
சரிவை சந்தித்த ரஷ்யாவின் ஏற்றுமதி வருவாய்
இந்தியாவின் இந்த கொள்முதல் உயர்வு காரணமாக, ஜூன் மாதத்தில் ரஷ்யாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி அளவு 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி வருவாய் மாதத்திற்கு மாதம் 8 சதவீதம் சரிந்து, ஒரு நாளைக்கு 348 மில்லியன் யூரோவாகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, ரஷ்யாவின் புதைபடிவ எரிபொருள் ஏற்றுமதி அளவு 7 சதவீதம் உயர்ந்த போதிலும், அதன் ஒட்டுமொத்த தினசரி வருவாய் 1 சதவீதம் சரிந்து 734 மில்லியன் யூரோவாக வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.