Loading...
வாடிக்கையாளர்களின் கண்ணியம் முக்கியம்! கடன் வசூல் ஏஜெண்ட்களுக்கு கடிவாளம் போட்ட ஆர்பிஐ; புதிய விதிகள் அறிமுகம்
கடன் வசூல் கெடுபிடிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகள்

வாடிக்கையாளர்களின் கண்ணியம் முக்கியம்! கடன் வசூல் ஏஜெண்ட்களுக்கு கடிவாளம் போட்ட ஆர்பிஐ; புதிய விதிகள் அறிமுகம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 07, 2026
10:20 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று தவணையை செலுத்தத் தவறாத வாடிக்கையாளர்களை, வசூல் முகவர்கள் (Recovery Agents) அச்சுறுத்துவதைத் தடுக்கும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடன் நிலுவையை வசூலிப்பது வங்கியின் உரிமையாக இருந்தாலும், அது வாடிக்கையாளரின் தனிப்பட்ட சுதந்திரம், கண்ணியம் மற்றும் தனியுரிமையைப் பாதிக்கும் வகையில் அமையக்கூடாது என ரிசர்வ் வங்கி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. வங்கிகள் மற்றும் வெளிமுகமை வசூல் முகவர்களுக்கான இந்த ஒருங்கிணைந்த புதிய வழிகாட்டுதல்கள் 2027 ஜனவரி 1 முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளன.

கட்டுப்பாடுகள்

நேரம் மற்றும் தொடர்புகொள்ளும் முறைகளில் கடுமையான கட்டுப்பாடுகள்

புதிய விதிகளின்படி, வசூல் முகவர்கள் காலை 8:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை மட்டுமே வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ளவோ அல்லது நேரில் சென்று சந்திக்கவோ முடியும்.

அநாமதேய எண்களில் இருந்து அழைப்பது, அச்சுறுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது, சமூக வலைதளங்களில் வாடிக்கையாளரின் விபரங்களைப் பதிவிடுவது மற்றும் உறவினர்கள், நண்பர்களைத் தொடர்புகொண்டு தொந்தரவு செய்வது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், குடும்பத்தில் மரணம் அல்லது மருத்துவ அவசரக் காலங்கள் போன்ற முக்கியமான உணர்வுப்பூர்வமான சூழ்நிலைகளின் போது வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

அடையாளம்

வசூல் முகவர்களின் அடையாள உறுதிப்பாடு மற்றும் பதிவு செய்தல்

வங்கி வசூல் முகவர்கள் நேரில் வரும்போது தங்களுக்கான அடையாள அட்டை, வங்கியின் அனுமதித் கடிதம் மற்றும் புகார் அதிகாரியின் தொடர்பு விவரங்களை வாடிக்கையாளரிடம் கண்டிப்பாகக் காண்பிக்க வேண்டும்.

மேலும், முகவர்கள் வாடிக்கையாளருடன் பேசும் அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் வங்கிகள் கட்டாயமாகப் பதிவுசெய்து குறைந்தது 6 மாதங்களுக்குப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

IIBF பயிற்சி முடித்த சான்றளிக்கப்பட்ட நபர்களை மட்டுமே வசூல் முகவர்களாக நியமிக்க வேண்டும் என்றும், முகவர்கள் செய்யும் அத்துமீறல்களுக்கு வங்கிகளே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் புதிய சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இழப்பீடு

விதிகளை மீறினால் இழப்பீடு வழங்கும் புதிய நடைமுறை

வெளிமுகமை முகவர்கள் விதிகளை மீறி செயல்பட்டு வாடிக்கையாளர்களுக்குப் பாதிப்பு அல்லது இழப்பை ஏற்படுத்தினால், அதற்காக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு வங்கிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இதற்காக ஒவ்வொரு வங்கியும் தனியான குறை தீர்க்கும் அமைப்பை உருவாக்கி, அதன் விவரங்களைக் கடன் ஒப்பந்தப் பத்திரத்திலேயே குறிப்பிட வேண்டும்.

வசூல் முகவர்களுக்கு வழங்கப்படும் இலக்குகள் மற்றும் ஊக்கத்தொகை முறைகள் வாடிக்கையாளர்களைத் துன்புறுத்தும் வகையில் அமையக் கூடாது என்றும், தனியுரிமைத் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT