ஐஐடி மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Oracle: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள், உலகளவில் சுமார் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவின் புகழ்பெற்ற ஐஐடி மற்றும் என்ஐடி உள்ளிட்ட முன்னணி பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாப் ஆஃபர்களை Oracle ரத்து செய்துள்ளது. சென்னை, கான்பூர், கரக்பூர் உள்ளிட்ட முக்கிய ஐஐடி வளாகங்கள் மற்றும் என்ஐடி வாரங்கல் போன்ற கல்வி நிறுவனங்களில் 2026-ம் ஆண்டு பேட்ச் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முழுநேர வேலைவாய்ப்புகள் மற்றும் கோடைகால இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை ஆரக்கிள் திரும்பப் பெற்றுள்ளது. ஒவ்வொரு வளாகத்திலும் தலா 2- 5 மாணவர்களின் ஆஃபர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணிநீக்கம்
இந்தியாவில் 12,000 ஊழியர்கள் நீக்கம்
ஆரக்கிளின் இந்த உலகளாவிய ஆட்குறைப்பு நடவடிக்கையில் இந்தியா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கிளவுட் (Cloud), பொறியியல், தயாரிப்பு மற்றும் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் சுமார் 12,000 இந்திய ஊழியர்கள் வேலையிழப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் வளர்ச்சி மையங்கள் மற்றும் ஆதரவு சேவைகளில் உள்ள பல துறைகளில் இந்த ஆட்குறைப்பு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சலுகை
பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கான சலுகைகள்
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு இழப்பீடாக சில நிதியுதவிகளை நிறுவனம் அறிவித்துள்ளது. அறிவிப்பு காலத்திற்கு பதிலாக ஒரு மாதச் சம்பளம் மற்றும் கூடுதல் இரண்டு மாதச் சம்பளம் (Ex-gratia) வழங்கப்படும். ரூ. 20,000 மதிப்பிலான மருத்துவக் காப்பீடு தொகுப்பின் ஒரு பகுதியாக அளிக்கப்படும். பயன்படுத்தப்படாத விடுமுறை நாட்கள் மற்றும் Gratuity போன்ற இதர நிலுவைத் தொகைகள் மொத்த ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிட்டுத் தனியாக வழங்கப்படும். தொழில்நுட்பத் துறையில் நிலவும் பொருளாதார மந்தநிலை மற்றும் நிறுவனத்தின் செலவினங்களை குறைக்கும் முயற்சியாக இந்த 30,000 ஊழியர்கள் பணிநீக்கம் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமேசான் போன்ற நிறுவனங்கள் பணிநீக்கத்தை அறிவித்துள்ள நிலையில், தற்போது ஆரக்கிளின் இந்த முடிவு இந்தியத் தொழில்நுட்பத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.