ஐடி ஊழியர்களுக்கு பேரதிர்ச்சி! ஒரே வருடத்தில் 21,000 பேரை வீட்டுக்கு அனுப்பிய Oracle
செய்தி முன்னோட்டம்
உலகளாவிய முன்னணி மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் கார்ப்பரேஷன், கடந்த ஒரே ஆண்டில் மட்டும் தனது நிறுவனத்தில் இருந்து சுமார் 21,000 ஊழியர்களை குறைத்துள்ளதாக திங்கட்கிழமை வெளியிட்டுள்ள தங்களின் வருடாந்திர ஒழுங்குமுறைத் தாக்கல் அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் மனிதவள தேவைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் எத்தகைய பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது என்பதை இந்த நடவடிக்கை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
காரணம்
ஊழியர்கள் குறைப்பிற்குப் பின்னால் இருக்கும் 'ஏஐ' காரணம்
தங்களின் வணிக செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதே இந்த வேலைவாயப்புக் குறைப்பிற்கு முக்கியக் காரணம் என்பதை ஆரக்கிள் நிறுவனம் தனது அறிக்கையில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. "எங்கள் நிறுவனச் செயல்பாடுகளில் ஏஐ (AI) தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதும், அவற்றைப் பயன்படுத்துவதும் எங்களது பணியாளர்களின் எண்ணிக்கையில் தற்பொழுது குறைப்பை ஏற்படுத்தியுள்ளது; இது எதிர்காலத்திலும் தொடரக்கூடும்." கடந்த மே 31 உடன் முடிவடைந்த நிதியாண்டின் நிலவரப்படி, நிறுவனத்தின் முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை 1,41,000 ஆகக் குறைந்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டின் 1,62,000 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 21,000 குறைவாகும். இந்த மறுசீரமைப்பு பணிகளுக்காக நிறுவனம் சுமார் 1.8 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது.
நிதி நெருக்கடி
AI உள்கட்டமைப்பு விரிவாக்கமும் நிதி நெருக்கடியும்
ஓபன்ஏஐ உள்ளிட்ட தங்களின் முக்கிய வாடிக்கையாளர்களுக்காகப் பிரம்மாண்ட தரவு மைய உள்கட்டமைப்புகளை உருவாக்குவதிலும், செயற்கை நுண்ணறிவு திறன்களை மேம்படுத்துவதிலும் ஆரக்கிள் நிறுவனம் தற்பொழுது மிக ஆக்ரோஷமாக முதலீடு செய்து வருகிறது. இந்த அதிரடி முதலீடுகள் நிறுவனத்திற்கு பெரும் நிதி அழுத்தத்தை ஏற்படுத்தியதால், செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொழில்நுட்ப துறையில் நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்ப முதலீடுகளையும், லாபத்தை அதிகரிப்பதற்கான செயல்பாடுகளையும் எவ்வாறு சமநிலைப்படுத்துகின்றன என்பதற்கு இந்த முடிவு ஒரு சிறந்த உதாரணமாகும்.