இந்தியாவில் தொலைக்காட்சி விற்பனை வணிகத்தை நிறுத்தும் ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போனை விற்பனையைத் தொடர்ந்து பட்ஜெட் டிவி விற்பனையிலும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக இருப்பவை ஒன்பிளஸும், ரியல்மியும். சீனாவைச் சேர்ந்த இந்த இரு நிறுவனங்களும் ஷாவ்மி நிறுவனத்துக்குப் போட்டியாக இந்தியாவில் பட்ஜெட் டிவிக்களை விற்பனை செய்து வருகின்றன.
ஆனால், தற்போது இந்தியாவில் தொலைகாட்சி விற்பனை வணிகத்தை இவ்விறு நிறுவனங்களும் நிறுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
தொலைக்காட்சி விற்பனை வணிகத்தை தொடர்ந்து நடத்துவது மற்றும் விற்பனைக்கு பிறகான சேவைகளை வழங்குவது லாபகரமாக இல்லை என இந்த நிறுவனங்கள் எண்ணுவதைத் தொடர்ந்து இந்த முடிவை அவை எடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ்
இந்தியாவில் அந்நிறுவனங்களின் திட்டம் என்ன?
இந்தியாவில் தொலைகாட்சி விற்பனை வணிகத்தை மட்டுமின்றி, அவற்றின் தயாரிப்பையுமே நிறுத்தத் திட்டமிட்டு வருகின்றன ஒன்பிளஸூம், ரியல்மியும்.
இதுவரை பல லட்சம் தொலைகாட்சிகளை இந்த நிறுவனங்கள் விற்பனை செய்திருக்கும் நிலையில், அவற்றை வாங்கியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கான விற்பனைக்கு பிறகான சேவை வழங்கப்படுமா இல்லையா என்பது குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
அப்படி எந்தவொரு சேவையும் வழங்கப்படாத பட்சத்தில், அது இந்தியாவில் அந்நிறுவனங்களுக்கு பெரிய பின்னடைவையே ஏற்படுத்தும்.
விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும், இந்தியாவில் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கான திட்டம் என்ன என்பதையும் அந்நிறுவனங்கள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.