LOADING...
வாரத்திற்கு ஒரே ஒரு இன்சுலின் ஊசி; சர்க்கரை நோய் சிகிச்சையில் உலக சாதனை படைத்த 'Awiqli' இந்தியாவில் அறிமுகம்
சர்க்கரை நோய் சிகிச்சையில் உலக சாதனை படைத்த 'Awiqli' இந்தியாவில் அறிமுகம்

வாரத்திற்கு ஒரே ஒரு இன்சுலின் ஊசி; சர்க்கரை நோய் சிகிச்சையில் உலக சாதனை படைத்த 'Awiqli' இந்தியாவில் அறிமுகம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 09, 2026
03:02 pm

செய்தி முன்னோட்டம்

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான நோவோ நார்டிஸ்க், உலகிலேயே முதன்முறையாக வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே செலுத்திக் கொள்ளும் 'Awiqli - insulin icodec' என்ற புதிய இன்சுலின் மருந்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை சர்க்கரை நோயாளிகள் தினசரி இன்சுலின் ஊசி செலுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் வருடத்திற்கு 365 முறை ஊசி போடும் அவதி குறைந்து, இனி ஆண்டுக்கு வெறும் 52 முறை (வாரத்திற்கு ஒன்று) ஊசி செலுத்திக் கொண்டாலே போதுமானது.இந்தியாவின் முன்னணி மருந்து விநியோக நிறுவனமான அபோட் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய 'அவிக்லி' இன்சுலினை நோவோ நார்டிஸ்க் நாடு முழுவதும் விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளது.

முக்கியத்துவம்

இந்த மருந்தின் முக்கியத்துவம்

இந்தியாவில் டைப் 1 மற்றும் அட்வான்ஸ்டு டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சிகிச்சை மிகவும் இன்றியமையாதது. ஆனால், தினமும் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற பயத்தின் காரணமாகவே, இந்தியாவில் நோயாளிகள் இன்சுலின் சிகிச்சையைத் தொடங்குவதை சராசரியாக 7 முதல் 9 ஆண்டுகள் வரை தள்ளிப்போடுகிறார்கள். இதனால் அவர்களின் இதயம் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்த 'இன்சுலின் பயத்தை' உடைக்கவே இந்த வாராந்திர 'அவிக்லி' இன்சுலின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலை

எல்லோரையும் வியக்க வைத்த மலிவான விலை

புதிய கண்டுபிடிப்பு என்பதால் இதன் விலை மிக அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போதைய தினசரி இன்சுலின் விலையை விட இது 30 முதல் 40 சதவீதம் வரை மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் 700 யூனிட்டுகள் கொண்ட ஒரு பேக்கின் விலை ₹2,611 ஆகும். அதாவது ஒரு யூனிட்டின் விலை வெறும் ₹3.73 மட்டுமே. பொதுவாக ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் ஒரு நோயாளிக்குத் தினமும் 10 யூனிட்டுகள் தேவைப்படும் என்றால், அவர்களுக்கு வாரத்திற்கு 70 யூனிட்டுகள் தேவைப்படும். அதன்படி கணக்கிட்டால், ஒரு வாரத்திற்கான இன்சுலின் செலவு வெறும் ₹261 மட்டுமே.

Advertisement

பயன்பாடு

'FlexTouch' பேனா மூலம் எளிதாகச் செலுத்தலாம்

இந்த 'அவிக்லி' இன்சுலின் மருந்து சாதாரண ஊசி வடிவில் இல்லாமல், 'FlexTouch' என்ற சிறப்புப் பேனா வடிவிலான சாதனத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இதனால் நோயாளிகள் தாங்களாகவே எவ்வித வலியும் இன்றி, மிக எளிதாக வாரத்திற்கு ஒருமுறை உட்செலுத்திக் கொள்ள முடியும். நோவோ நார்டிஸ்க் நிறுவனத்தின் மருத்துவக் குழு நடத்திய 'ONWARDS-1' ஆய்வில், தினமும் செலுத்தப்படும் இன்சுலின்களை விட இந்த 'அவிக்லி' வாராந்திர இன்சுலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை (HbA1c) மிக சிறப்பாகக் கட்டுப்படுத்துவது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், திடீரென சர்க்கரை அளவு ஆபத்தான நிலைக்குக் குறைந்துபோகும் (Hypoglycaemia) பக்கவிளைவும் இதில் மிகவும் குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement