
முழுவதும் இந்திய நிறுவனமாக மாறும் நத்திங்கின் சிஎம்எஃப்; உற்பத்திக்காக ரூ.837 கோடி முதலீடு
செய்தி முன்னோட்டம்
லண்டனைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் (Nothing), இந்தியாவில் தனது துணை நிறுவனமான சிஎம்எஃப் (CMF) நிறுவனத்தை ஒரு சுதந்திரமான நிறுவனமாக நிறுவ திட்டமிட்டுள்ளது. சிஎம்எஃப்பின் உலகளாவிய செயல்பாடுகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) மற்றும் உற்பத்திக்கு இந்தியா ஒரு மையமாகச் செயல்படும் என்று நத்திங் அறிவித்துள்ளது. இந்த இலக்கை அடைய, இந்திய மின்னணு உற்பத்தி நிறுவனமான ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் (Optiemus Infracom) உடன் நத்திங் ஒரு கூட்டுத் தொழில் ஒப்பந்தத்தில் (Joint Venture) கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரு நிறுவனங்களும் இணைந்து $100 மில்லியனுக்கும் (சுமார் ₹837 கோடி) அதிகமாக முதலீடு செய்யவுள்ளன.
மையம்
உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக மாறும் இந்தியா
இந்த முதலீட்டின் மூலம், இந்தியா, நத்திங் மற்றும் சிஎம்எஃப் தயாரிப்புகளுக்கான உலகளாவிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக மாறும். இந்த முயற்சியானது அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 1,800-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய முதலீட்டின் மூலம், நத்திங் நிறுவனம் இந்தியாவில் செய்துள்ள மொத்த முதலீடுகளின் மதிப்பு $200 மில்லியனைத் தாண்டிவிட்டது. நத்திங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கார்ல் பேய், மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து இந்த விரிவாக்கம் குறித்து விவாதித்தார். இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கும் நிலையில், சிஎம்எஃப் தனது முதல் தயாரிப்பான சிஎம்எஃப் ஹெட்ஃபோன் ப்ரோவை செப்டம்பர் 29 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளது.