'எங்கள் நாட்டைச் சுரண்டி வேறு நாடுகளுக்கு அனுப்பக் கூடாது': டாடா நிறுவனத்தை வெளியேற உத்தரவிட்ட கென்ய அதிபர்
செய்தி முன்னோட்டம்
கென்யாவில் அமைந்துள்ள இந்தியாவின் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்துமாறு கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் நூறாண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் நடைபெற்று வந்த கனிமச் சுரங்க நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதிபர் வில்லியம்,"டாடா நிறுவனம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இங்குள்ள சோடா ஆஷ் கனிம வளம் மூலம் பயனடைந்துள்ளது. ஆனால் காஜியாடோ மாவட்டத்தில் ஒரு தொழிற்சாலையையோ அல்லது உள்ளூர் மக்களின் வளர்ச்சிக்குத் தேவையான உள்கட்டமைப்பையோ ஏற்படுத்தவில்லை" என சாடினார். மேலும் "நாம் மற்றவர்களுக்கு அடிமைகளா?" எனக் கேள்வி எழுப்பிய அவர், மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்யாமல், உள்ளூரிலேயே தொழிற்சாலைகளை தொடங்கும் புதிய நிறுவனங்களுக்கு மட்டுமே இனி உரிமம் வழங்கப்படும் எனத் தெளிவுபடுத்தினார்.
நடவடிக்கைகள்
கடுமையான சட்டம் மற்றும் நிதிசார் நடவடிக்கைகள்
ஏற்கனவே கடந்த ஜூலை 28 அன்று கென்ய சுரங்கத்துறை அமைச்சகம் டாடா நிறுவனத்தின் சுரங்கப் பணிகளை இடைநிறுத்தம் செய்தது.
உள்ளூர் கொள்முதல் விதிகளை மதிக்காதது, நிலத்திற்கான கட்டண நிலுவைத் தொகை மற்றும் கனிமச் சுரங்க விதிமீறல்கள் ஆகியவை இதற்குக் காரணங்களாகக் கூறப்பட்டன.
எனினும், டாடா கெமிக்கல்ஸ் நிர்வாகம் தாங்கள் அனைத்து அரசு விதிகளுக்கும் கட்டுப்பட்டு இயங்கியதாகவும், உள்ளூர் மக்களுக்கு குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வந்ததாகவும் தெரிவித்தது.
அரசியல் சர்ச்சை
அரசியல் சர்ச்சை மற்றும் தொழிலாளர்கள் பாதிப்பு
அதிபரின் இந்த முடிவுக்கு கென்ய எதிர்க்கட்சியான 'டெமாக்ரசி ஃபார் சிட்டிசன்ஸ் பார்ட்டி' (DCP) கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவால் சுமார் 500 நேரடி ஊழியர்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், மகேடி பகுதியில் உள்ள லித்தியம் மற்றும் கச்சா எண்ணெய் வளங்களை கைப்பற்றி தங்கள் கூட்டணி நிறுவனங்களுக்கு வழங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
வெளிநாட்டு முதலீடுகளுக்கு கென்யா விதிக்கும் இந்தக் கடுமையான நிபந்தனைகள், சர்வதேச வர்த்தக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.