சம்பளத்தை விட Flexibility-க்கு முக்கியத்துவம் அளிக்கும் வேலை தேடுபவர்கள், புதிய ஆய்வு முடிவுகள்
கொரோனா பெருந்தொற்று இந்திய வேலை வாய்ப்புச் சந்தையில் பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறது. பெருந்தொற்றுக்கு முன்னர், ஒரு வேலையில் சம்பளத்தையே முதன்மையாகக் கருதி வந்த வேலை தேடுபவர்கள், தற்போது நெகிழ்வுத்தன்மையையே (Flexibility) முதன்மையாகக் கருதுகின்றனர். இதுகுறித்து ஆய்வு ஒன்றை, வேவை வாய்ப்புத் தளமான இன்டீட் (Indeed) மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. அந்த ஆய்வு முடிவுகளின் படி, இந்தியாவில் தற்போது வேலை தேடுபவர்களில் 71% பேர் ஒரு வேலையில் உள்ள நெகிழ்வுத்தன்மையையே முதன்மையாகக் கருதுகின்றனர். அதாவது, வீட்டியிலிருந்த வேலை பார்க்கும் வாய்ப்பை அளிப்பது, நாம் வேலை செய்யும் நேரத்தை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்வது உள்ளிட்டவற்றை. இதனைத் தொடர்ந்து 70% பேர், வீட்டியிலிருந்தோ அல்லது ஹைபிரிட்டாகவோ என, வேலை பார்க்கும் முறையை முக்கியமாகக் கருதுகின்றனர்.
வேலை தேடுபவர்கள் முதன்மையாக எதனைக் கருதுகின்றனர்?
மேற்கூறியவற்றுக்கு அடுத்தபடியாக, 69% பேர் அலுவலகம் அமைந்திருக்கும் இடத்தையும், 67% பேர் நிர்வாகம் அளிக்கும் பிற சலுகைகளையும் முக்கியமாகக் கருதுவதாக அந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 63% பேர் ஹைபிரிட் வேலை முறையையே தாங்கள் விரும்புவதாகத் தெரிவித்திருக்கின்றனர். அதாவது, ஒரு வாரத்தில் சில நாட்கள் வீட்டிலிருந்தபடியும், சில நாட்கள் அலுவலகத்திலிருந்தும் வேலை பார்ப்பதை விரும்புவதாகத் தெரிவித்திருக்கின்றனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையானோர், ஒரு வேலைக்கு நேர்காணலின் போது வெளிப்படைத்தன்மையை அதிகம் எதிர்பார்க்கின்றனர். மேலும், 48% பேர் ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும் முன்னரே அதற்கான சம்பளம் எவ்வளவு என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்திருக்கின்றனர். இந்த ஆய்வானது, 561 ஊழியர்கள் மற்றும் 1249 வேலை தேடுபவர்கள் உட்பட மொத்தம், 1810 நபர்களிடம் நடத்தப்பட்டிருக்கிறது.