
பேடிஎம் மற்றும் போன்பேவுடன் போட்டியிட சவுண்டு பாக்ஸை அறிமுகப்படுத்துகிறதா ஜியோ?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் கட்டணங்கள் குறித்த தகவல்களை உடனடியாக அறிவிக்கும் வகையில் சவுண்டு பாக்ஸ் என்ற சாதனத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது பேடிஎம்.
தொழில்நுட்பத்தில் அளவில் விழிப்புணர்வு இல்லாத, இந்திய சிறு மற்றும் குறு வணிகர்களுக்கும் இந்த சாதனம் யுபிஐ பயன்பாட்டை எளிமையாகவும், நம்பகத்தன்மையுடையதாகவும் மாற்றியது.
பேடிஎம்மைத் தொடர்ந்து, போன்பே, அமேசான் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களும், சவுண்டு பாக்ஸ்களை வணிகர்களுக்கு வழங்கத் தொடங்கினர். தற்போது அந்த வரிசையில் புதிதாக இணையவிருக்கிறது ஜியோ.
கடந்த ஜூலை மாதம், ரிலையன்ஸ் முதலீட்டு நிறுவனத்திலிருந்து தனி நிறுவனமாகப் பிரிந்தது ஜியோ நிதிச் சேவைகள் நிறுவனம். தற்போது இந்த நிறுவனத்தின் கீழ் எந்த வகையான சேவைகளும் அளிக்கப்படவில்லை. ஆனால், விரைவில் புதிய சேவைகளை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
ஜியோ
சவுண்டு பாக்ஸை சோதனை செய்து வரும் ஜியோ:
சவுண்டு பாக்ஸ்களை வழங்குவதற்கு வணிகர்களிடமிருந்து மாதாந்திர முறையில் அதனை வழங்கும் நிறுவனங்கள் சிறு கட்டணத்தைப் பெறுகின்றன.
ஆனால், அதனைக் கடந்து ஒரு வணிகர் அல்லது வணிகம் குறித்த பல்வேறு விதமான தகவல்களை இந்த சவுண்டு பாக்ஸ்களால் பேடிஎம், போன்பே ஆகிய நிறுவனங்கள் பெற முடியும்.
இந்தத் தகவல்களைக் கொண்டு, தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு எப்படி சேவை வழங்கலாம் என்பது குறித்த திட்டங்களையும் அந்நிறுவனங்களால் வகுக்க முடியும்.
விரைவில் நிதிச் சேவைகளை வழங்கவிருக்கும் ஜியோ, இதனை மனதில் கொண்ட புதிய சவுண்டு பாக்ஸை தங்கள் கிளை நிறுவனங்கள் மூலம் சோதனை செய்து வருகிறது. எப்போதும், ஒரு தயாரிப்பை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு கிளை நிறுவனங்கள் மூலம் அதனை சோதனை செய்வது ஜியோவின் வழக்கம்.
ஜியோ
என்னென்ன சேவைகளை வழங்கவிருக்கிறது ஜியோ நிதிச் சேவைகள் நிறுவனம்?
சவுண்டு பாக்ஸை ஜியோ சோதனை செய்து வந்தாலும், அதனை எப்போது பொதுப் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தும் அல்லது அறிமுகப்படுத்தும் திட்டம் இருக்கிறதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
புதிய ஜியோ நிதிச் சேவைகள் நிறுவனத்தின் மூலமாக, பல்வேறு நிதிச் சேவைகளை விரைவில் வழங்கத் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம்.
வணிகத்திற்காக கடன் வழங்குவது, தனிநபர்க் கடன், கடைகளை விரிவுபடுத்துவதற்கான கடன்கள் மற்றும் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பற்ற வணிகக் கடன்கள் வழங்குதல் ஆகிய நிதிச் சேவைகளை வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
வணிக ரீதியிலான நிதிச் சேவைகளை வழங்க ஜியோ திட்டமிட்டிருக்கும் நிலையில், சவுண்டு பாக்ஸின் அறிமுகம் அந்நிறுவனத்தின் திட்டங்களுக்கு மிகவும் முக்கியமான தேவையாகிறது. எனவே, விரைவில் ஜியோ அதனை அறிமுகப்படுத்தும் என நாம் எதிர்பார்க்கலாம்.