விரைவில் வாரத்திற்கு 3 நாட்களுக்கு மட்டும் அலுவலகத்திலிருந்து பணி: இன்ஃபோசிஸ் அறிக்கை
இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநரான இன்ஃபோசிஸ், தனது ஊழியர்களுக்கு மூன்று நாள் அலுவலகத்திலிருந்து வேலை செய்வதை கட்டாயமாக்க உள்ளது. கோவிட் லாக்டவுனிற்கு பிறகு, தினசரி அலுவலகம் வருவதை ஊக்குவிக்க நிர்வாகம் எடுத்து பலதரப்பட்ட முயற்சிகளும் தோல்வியடையவே, அடுத்த கட்டமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி தி எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இது, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தியின் சமீபத்திய வைரல் போட்காஸ்ட் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, உற்பத்தித்திறனை அதிகரிக்க வாரத்தில் 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்கிற அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
ஊழியர்களுக்கு பறந்த மின்னஞ்சல்
ET அறிக்கையின்படி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மேல்மட்ட தலைவர்கள் இந்த அறிவிப்பை பற்றி தங்களுடைய ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். அதில், வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது அலுவலகத்திற்கு வரத் தொடங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட மின்னஞ்சலின்படி, "இது மிக விரைவில் கட்டாயமாகிவிடும்" என்றும் கூறப்பட்டுள்ளது. அதே மின்னஞ்சலில் "கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து மூன்று வருடங்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் ஏற்பாடு போதுமானது" எனக்குறிப்பிட்டு, தங்கள் அதிருப்தியையும் அவர்கள் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காரணங்களை தவிர, ஊழியர்கள் அலுவலகத்திலிருந்து பணியைத் தொடங்க வேண்டும் என்று உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்ஃபோசிஸ் மட்டுமல்ல, பல ஐடி நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களை தினசரி அலுவலகத்திற்கு வரக்கூறி அறிக்கை அனுப்ப தொடங்கியுள்ளன.