LOADING...
விமானத்தில் பயணம் செய்யப் போறீங்களா? இன்று முதல் இண்டிகோ கட்டணம் அதிரடி உயர்வு; பயணிகளுக்குக் கூடுதல் சுமை
இண்டிகோ விமானக் கட்டணம் உயர்வு

விமானத்தில் பயணம் செய்யப் போறீங்களா? இன்று முதல் இண்டிகோ கட்டணம் அதிரடி உயர்வு; பயணிகளுக்குக் கூடுதல் சுமை

எழுதியவர் Sekar Chinnappan
Mar 14, 2026
08:34 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலராக உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானக் கட்டணங்களில் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை மார்ச் 14 முதல் அமல்படுத்தியுள்ளது. மார்ச் 14 அதிகாலை 00:01 மணி முதல் செய்யப்படும் அனைத்து புதிய முன்பதிவுகளுக்கும் இந்த விலையேற்றம் பொருந்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை

எரிபொருள் விலை உயர்வால் வந்த மாற்றம்

சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின்படி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்களால் விமான எரிபொருள் விலை சுமார் 85 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. விமான நிறுவனங்களின் ஒட்டுமொத்த செயல்பாட்டுச் செலவில் எரிபொருள் செலவு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, இந்தத் திடீர் விலை உயர்வைச் சமாளிக்கக் கட்டணத்தில் மாற்றம் செய்வது அவசியம் என்றும், பயணிகளின் சுமையைக் கருத்தில் கொண்டு மிகக் குறைந்த அளவிலான கூடுதல் கட்டணத்தையே அமுல்படுத்தியுள்ளதாகவும் இண்டிகோ நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் விளக்கியுள்ளது.

வழித்தடங்கள்

வழித்தடங்கள் வாரியாகக் கூடுதல் கட்டண விபரம்

புதிய கட்டண விபரங்களின்படி, இந்தியாவிற்குள் மேற்கொள்ளப்படும் உள்நாட்டுப் பயணங்கள் மற்றும் இந்தியத் துணைக்கண்ட வழித்தடங்களுக்கு ஒரு செக்டருக்கு 425 ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும். மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் செய்பவர்கள் 900 ரூபாயும், தென்கிழக்கு ஆசியா, சீனா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்குச் செல்பவர்கள் 1,800 ரூபாயும் கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும். ஐரோப்பிய நாடுகளுக்கான விமானப் பயணங்களுக்கு அதிகபட்சமாக 2,300 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

ஏர் இந்தியா

ஏர் இந்தியா நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தியது

இண்டிகோவிற்கு முன்னதாகவே ஏர் இந்தியா நிறுவனம் தனது உள்நாட்டு விமானக் கட்டணத்தில் 399 ரூபாய் கூடுதல் கட்டணத்தை மார்ச் 12 முதல் அமல்படுத்தியது. சர்வதேச வழித்தடங்களிலும் படிப்படியாக இந்தக் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் என அந்த நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது. முன்னணி நிறுவனங்களின் இந்த அடுத்தடுத்த கட்டண உயர்வால், கோடை விடுமுறைக்காகப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

Advertisement