LOADING...
பட்ஜெட் பையில் இவ்வளவு மாற்றங்களா? பகி காதா முதல் டிஜிட்டல் பட்ஜெட் வரை ஒரு சுவாரஸ்யப் பயணம்
இந்திய பட்ஜெட்டின் வளர்ச்சி

பட்ஜெட் பையில் இவ்வளவு மாற்றங்களா? பகி காதா முதல் டிஜிட்டல் பட்ஜெட் வரை ஒரு சுவாரஸ்யப் பயணம்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 01, 2026
08:03 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் மத்திய பட்ஜெட் என்பது வெறும் நிதி அறிக்கை மட்டுமல்ல, அது தேசத்தின் கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடையாளமாகவும் திகழ்கிறது. 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்கிறார். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். நிர்மலா சீதாராமன் தனது ஒன்பதாவது தொடர்ச்சியான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதன் மூலம், இந்தியாவின் நிதி வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறார். கடந்த சில ஆண்டுகளில் அவர் பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையிலும், ஆவணங்களைக் கொண்டு வரும் முறையிலும் பல புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்.

அடையாளம்

தோல் பை மற்றும் காலனித்துவ அடையாளம்

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை 1947 இல் தாக்கல் செய்த ஆர்.கே.சண்முகம் செட்டியார் முதல் பல தசாப்தங்களாக நிதியமைச்சர்கள் பட்ஜெட் ஆவணங்களை ஒரு தோல் பையில் கொண்டு வருவதையே மரபாகக் கொண்டிருந்தனர். இந்த முறை பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் கிளாட்ஸ்டோன் பாக்ஸ் என்ற நடைமுறையைப் பின்பற்றி உருவானது. இது ஆங்கிலேயர் காலத்து அடிமைத்தனத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட போதிலும், பல தசாப்தங்களாக இந்திய நிதியமைச்சர்கள் பல்வேறு நிறங்கள் மற்றும் வடிவங்களில் உள்ள தோல் பைகளையே பயன்படுத்தி வந்தனர்.

பாரம்பரியம்

பகி காதா மற்றும் இந்திய பாரம்பரியம்

2019 ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் இந்தப் பழங்காலப் பழக்கத்தை உடைத்து எறிந்தார். ஆங்கிலேயர் காலத்துப் பையைத் தவிர்த்துவிட்டு, இந்திய பாரம்பரிய கணக்கு புத்தகமான பகி காதா முறையை அறிமுகப்படுத்தினார். சிவப்பு நிறத் துணியால் சுற்றப்பட்ட இந்த ஆவண முறை, இந்திய வணிகர்களின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது. இந்திய கலாச்சாரத்திற்கு மதிப்பளிக்கும் விதமாகவும், காலனித்துவ தாக்கத்திலிருந்து விடுபடும் விதமாகவும் இந்த மாற்றத்தை அவர் கொண்டு வந்தார். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

Advertisement

டிஜிட்டல் புரட்சி

டேப்லெட் மற்றும் டிஜிட்டல் இந்தியா புரட்சி

தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டமாக, 2021 ஆம் ஆண்டில் இந்தியா தனது முதல் காகிதமில்லா பட்ஜெட்டை அறிமுகப்படுத்தியது. பகி காதா போன்ற சிவப்பு நிற உறையில் வைக்கப்பட்ட மேட் இன் இந்தியா டேப்லெட் மூலம் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தார். 2026 ஆம் ஆண்டிலும் இதே டிஜிட்டல் முறையே தொடர்கிறது. காகிதப் பயன்பாட்டைக் குறைப்பதுடன், டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. மேலும், பட்ஜெட் ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் உடனடியாகக் கிடைப்பதற்கும் இது வழிவகை செய்துள்ளது.

Advertisement