உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம்; 2025இல் இந்தியாவின் 7% ஜிடிபி வளர்ச்சி தொடரும் என மூடிஸ் அறிக்கை
செய்தி முன்னோட்டம்
உறுதியான உட்கட்டமைப்புச் செலவினம் (infrastructure spending) மற்றும் உள்நாட்டு நுகர்வு (household consumption) ஆகியவற்றின் வலிமையால், உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும் என்று மூடிஸ் ரேட்டிங்ஸ் தனது சமீபத்திய 'குளோபல் மேக்ரோ அவுட்லுக்' அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி குறித்த தனது கணிப்பை 7 சதவீதமாக மூடிஸ் தக்கவைத்துள்ளது. அதைத் தொடர்ந்து, 2026இல் 6.4 சதவீதமும், 2027இல் 6.5 சதவீதமும் வளர்ச்சி இருக்கும் என்று மூடிஸ் கணித்துள்ளது. உறுதியான உள்நாட்டுத் தேவை மற்றும் ஏற்றுமதியில் தொடரும் பன்முகத்தன்மை ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய உந்து சக்திகளாக இருக்கும் என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஜி20 நாடுகள்
ஜி20 நாடுகளில் முன்னிலை
ஜி20 நாடுகளில் வேகமாக வளரும் பொருளாதாரங்களான பிரேசில் மற்றும் இந்தியா ஆகியவை 2027 வரை முறையே 2% மற்றும் 6.5% வளர்ச்சியடையும் என்றும் மூடிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. வலிமையான பொருளாதாரக் குறியீடுகள் இருந்தபோதிலும், தனியார் துறையின் மூலதனச் செலவினம் இன்னும் பின்தங்கியே காணப்படுவதாக மூடிஸ் சுட்டிக்காட்டியுள்ளது. பணவீக்கத்தைப் பொறுத்தவரை, உணவுப் பொருட்களின் விலைக் குறைவு மற்றும் ஜிஎஸ்டி வரிக் குறைப்புகள் காரணமாக அக்டோபரில் 0.25% என்ற சாதனைக் குறைவை இந்தியா எட்டியுள்ளது. 2025இல் 2.8%, 2026இல் 3.5% மற்றும் 2027இல் 4% என்ற அளவில் பணவீக்கம் இருக்கும் என்று மூடிஸ் கணித்துள்ளது. ஆனால், உலகளாவிய வர்த்தகத் திருத்தங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் வளர்ச்சி வேகத்திற்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் மூடிஸ் எச்சரித்துள்ளது.