
அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 58% சரிவு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவிலிருந்து அதன் மிகப்பெரிய சந்தையான அமெரிக்காவிற்கு ஸ்மார்ட்போன் ஏற்றுமதி, கடந்த நான்கு மாதங்களில் 58% சரிவை சந்தித்துள்ளது. இது வர்த்தக ஆய்வாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) இந்த வீழ்ச்சியை ஒரு ஆபத்தான போக்காகக் குறிப்பிட்டுள்ளது. ஏற்றுமதி மே மாதத்தில் $2.29 பில்லியனில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் $964.8 மில்லியனாகக் குறைந்துள்ளது. ஸ்மார்ட்போன்களுக்கு எந்த வரியும் இல்லாத போதிலும் இந்த சரிவு ஏற்பட்டது, இதன் உண்மையான காரணங்களைக் கண்டறிய அவசர விசாரணை தேவை என GTRI வலியுறுத்தியுள்ளது. 2025 நிதியாண்டில், இந்தியாவின் மொத்த ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் 44% ($10.6 பில்லியன்) அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது. எனவே, இந்த சரிவு ஒரு முக்கிய ஏற்றுமதி துறைக்கு பெரும் அடியாக கருதப்படுகிறது.
சரிவு
ஏற்றுமதி சரிவு
இந்த சரிவு ஸ்மார்ட்போன்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. பல துறைகளிலும் பரவலான ஏற்றுமதி சரிவு காணப்படுகிறது. வரி விலக்கு அளிக்கப்பட்ட பிற பொருட்களின் ஏற்றுமதி கிட்டத்தட்ட 42% சரிந்தது. அதே நேரத்தில், மருந்துகள் மற்றும் நகைகள் முறையே 13.3% மற்றும் 9.1% வீழ்ச்சியடைந்தன. கடல் உணவு ஏற்றுமதி 43.8% வீழ்ச்சியுடன் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஜவுளி மற்றும் ரசாயன ஏற்றுமதிகளும் இதே காலகட்டத்தில் 9.3% மற்றும் 15.9% சரிவை கண்டன. தொடர்ந்து மூன்று மாதங்களாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி சரிந்து வருவதாக GTRI நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா சுட்டிக்காட்டியுள்ளார்.