"வதந்திகளை நம்பாதீர்..60 நாட்களுக்கு பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு இல்லை": மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
ஈரான்-வளைகுடா நாடுகளில் போர் நீடித்து வரும் சூழலில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் தகவல்களை மத்திய அரசு மறுத்துள்ளது. நாட்டின் எரிசக்தி நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அடுத்த 60 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இருப்பு தற்போது 60 நாட்களுக்குத் தேவையான அளவில் உள்ளது. நாட்டின் மொத்த சேமிப்புத் திறன் 74 நாட்களாக இருக்கும் நிலையில், தற்போதைய சூழலில் 2 மாதங்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என PIB தெரிவித்துள்ளது.
மாற்று வழி
மாற்று வழிகளில் கச்சா எண்ணையை கொள்முதல் செய்யும் இந்தியா
ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் நிலவினாலும், இந்தியா 40-க்கும் மேற்பட்ட உலக நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெயைப் பெற்று வருகிறது. மற்ற பிராந்தியங்களில் இருந்து இறக்குமதி அதிகரித்துள்ளதால் விநியோகத்தில் எவ்வித இடைவெளியும் இல்லை. நாட்டின் அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் தங்களது முழுத் திறனுக்கும் மேலாக செயல்பட்டு வருவதால், எரிபொருள் விநியோகம் சீராக உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உள்நாட்டு எரிவாயு உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து பெரிய அளவிலான எல்பிஜி கப்பல்கள் தற்போது இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. எனவே சிலிண்டர் விநியோகத்தில் எவ்வித ரேஷன் முறையும் அமல்படுத்தப்படவில்லை எனவும் அறிக்கை கூறுகிறது.
எச்சரிக்கை
வதந்திகளுக்கு எச்சரிக்கை
சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களே சில இடங்களில் பெட்ரோல் நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படக் காரணம் என அரசு சுட்டிக்காட்டியுள்ளது. வதந்திகளை பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சகம் எச்சரித்துள்ளது. மேலும், குழாய் வழி எரிவாயு (PNG) திட்டமானது தட்டுப்பாட்டிற்கான தீர்வு அல்ல, அது நீண்டகாலத் தூய்மையான எரிசக்தித் திட்டத்தின் ஒரு பகுதி என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும், தேவையில்லாமல் எரிபொருளைச் சேமிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.