இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் சரிவு; ஆர்பிஐ தகவல்
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $3.4 பில்லியன் குறைந்து, அக்டோபர் 25ஆம் தேதி நிலவரப்படி $684.8 பில்லியனை எட்டியுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தரவு காட்டுகிறது. முன்னதாக, அக்டோபர் 18 நிலவரப்படி, இது $2.16 பில்லியன் குறைந்து $688.26 பில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் மாதத்தில் $700 பில்லியன்களை கடந்து வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட நிலையில், அதன் பிறகு, தற்போது நான்காவது முறையாக சரிந்துள்ளது. எனினும், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, உலகின் சிறந்த அந்நிய செலாவணி வைத்திருப்பவர்களில் ஒன்றாக உள்ளதோடு, உலகளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் வாராந்திர புள்ளியியல் இணைப்பின்படி, இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணம், அந்நியச் செலாவணி சொத்துக்களில் (எஃப்சிஏக்கள்) சரிவு கூறப்பட்டுள்ளது.
தங்கம் கையிருப்பு அதிகரிப்பு
எஃப்சிஏக்கள் $4.48 பில்லியன் குறைந்து $593.75 பில்லியனாக நிலைபெற்றன. இருப்பினும், தங்கம் கையிருப்பு $1 பில்லியன் அதிகரித்து, மொத்தமாக $68.5 பில்லியனாக இருந்தது. சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆர்) இருப்புநிலை $52 மில்லியன் சரிந்து $18.2 பில்லியனாகவும், சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) உடனான இருப்பு நிலை $9 மில்லியன் குறைந்து இப்போது $4.3 பில்லியனாக உள்ளது. இரண்டும் சிறிய அளவிலான சரிவைக் கண்டுள்ளன. சமீபத்திய ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சி, உலகின் மிகப்பெரிய அந்நியச் செலாவணி கையிருப்பு வைத்திருப்பவர்களாக இந்தியாவை உயர்த்தியுள்ளது. இப்போது சீனா, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்திற்குப் பின் உலகில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.