ஆண்களைத் தாண்டி கேமிங் துறையைக் கைப்பற்றும் இந்தியப் பெண்கள்! மிரள வைக்கும் புதிய ரிப்போர்ட்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் ஆன்லைன் கேமிங் சந்தையானது உலகளவில் மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்து வரும் வேளையில், நாட்டின் மொபைல் கேமிங் துறை மட்டும் வரும் 2029 ஆம் ஆண்டிற்குள் 2.4 பில்லியன் டாலர் மதிப்பை எட்டி சாதனை படைக்கும் என 'மிக்ஸி' (MIXI) நிறுவனத்தின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. வளர்ந்து வரும் உலகளாவிய கேமிங் சந்தைகளின் கூட்டுப் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்தியா தற்பொழுது இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் கேமிங் சந்தை பக்குவமடைந்து, முதலீட்டாளர்களை ஈர்க்கும் முக்கியப் புள்ளியாக மாறியுள்ளது.
பாலின இடைவெளி
கேமிங் துறையில் நீடிக்கும் பாலின இடைவெளி
இந்திய கேமிங் சந்தை பிரம்மாண்ட வளர்ச்சி கண்டாலும், கேமர்களின் புள்ளிவிபரங்களில் இன்னும் பெரிய அளவிலான பாலின இடைவெளி நீடித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவின் மொத்த கேமர்களில் 86 சதவீதம் பேர் ஆண்கள் என்றும், பெண்கள் வெறும் 14 சதவீதம் மட்டுமே பங்களிக்கிறார்கள் என்றும் இந்த அறிக்கை அதிர்ச்சி விபரத்தை வெளியிட்டுள்ளது. ஹார்டுவேர் விலை அதிகமாக இருப்பதால் பிசி (PC) கேமிங் இன்னும் 1.4 சதவீதப் பயன்பாட்டுடன் மிகக் குறுகிய வட்டத்திற்குள்ளேயே முடங்கியுள்ளது.
பெண்களின் ஆதிக்கம்
பஸில் மற்றும் லைஃப்ஸ்டைல் கேம்களில் பெண்களின் ஆதிக்கம்
விளையாட்டு, உத்தி மற்றும் துப்பாக்கிச் சூடு (Sports, Strategy, Shooter) போன்ற முக்கிய கேம்களில் 90 சதவீதத்திற்கும் மேல் 18-24 வயதுடைய இளம் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஆனால், கேமிங் வகைகள் மாறும்போது பெண்களின் பங்களிப்பு வியக்கத்தக்க வகையில் உயர்கிறது. குறிப்பாக, லைஃப்ஸ்டைல் கேம்களில் 52 சதவீதமும், பஸில் (Puzzle) கேம்களில் 45 சதவீதமும் பெண்கள் விளையாடுகிறார்கள். பெண்களின் இந்த வருகையால், லைஃப்ஸ்டைல் கேம்களின் வருவாய் ஆண்டுக்கு 23 சதவீதம் என்ற கணக்கில் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது.
ராயல் ஷூட்டர் கேம்கள்
வருவாயில் முதலிடம் வகிக்கும் பேட்டில் ராயல் ஷூட்டர் கேம்கள்
கேமிங் சந்தையில் பெண்களின் பங்களிப்பு மெல்ல அதிகரித்து வந்தாலும், ஒட்டுமொத்த கேமிங் வருவாயைப் பொறுத்தவரை 'பேட்டில் ராயல்' (Battle Royale) போன்ற துப்பாக்கிச் சூடு கேம்களே தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தியாவில் கேம்களுக்குள் பொருட்கள் வாங்கும் (In-App Purchase) ஒட்டுமொத்த வருவாயில் 43 சதவீதத்தை இந்த ஷூட்டர் கேம்கள் மட்டுமே அள்ளுகின்றன. தென்கிழக்கு ஆசியச் சந்தைகளைப் போலவே இந்தியாவிலும் மல்டிபிளேயர் கேம்களே அதிக வருவாயை ஈட்டித் தரும் மாஸ்டர் பிளானாக விளங்குகின்றன.
வயது முதிர்ந்தவர்கள்
வயது முதிர்ந்த கேமர்களின் வருகையும் எதிர்கால மாற்றமும்
பஸில் மற்றும் கேசினோ (Casino) போன்ற கேமிங் பிரிவுகள் 35 வயதிற்கு மேற்பட்ட முதிர்ந்த கேமர்களைத் தன்பால் ஈர்த்து வருகின்றன. இந்த குறிப்பிட்ட கேமிங் பிரிவுகளில் விளையாடுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் நடுத்தர வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கேமிங் சந்தை இன்னும் சில ஆண்டுகளில் முழுமையான முதிர்ச்சியை எட்டும்போது, பெண் கேமர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களின் பங்களிப்பு இயற்கையாகவே மேலும் அதிகரிக்கும் என்பதால், எதிர்காலத்தில் பல்வேறு புதிய கேமிங் பிரிவுகள் உருவாக வழிவகுக்கும்.