இந்தியா-நியூசிலாந்து இடையே 20 பில்லியன் டாலர் மதிப்பிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்: ஏப்ரல் 27ல் கையெழுத்து
செய்தி முன்னோட்டம்
இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி டெல்லியில் கையெழுத்தாக உள்ளது. நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் பொருளாதார உறவில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இது இருதரப்பு வர்த்தகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து பில்லியன் டாலராக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியப் பொருட்களுக்கு நியூசிலாந்து சந்தையில் வரி இல்லாத அணுகல் கிடைக்க உள்ளது. குறிப்பாக ஜவுளி, தோல் பொருட்கள், மருந்து உற்பத்தி, பொறியியல் பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்கள் ஏற்றுமதிக்கு பெரும் வாய்ப்புகள் உருவாகும். இந்தியா தனது வர்த்தக வரி வரிகளில் சுமார் 70 சதவீதத்தை தாராளமயமாக்க ஒப்புக்கொண்டுள்ளது. அதே சமயம் பால், சர்க்கரை மற்றும் சில முக்கிய விவசாயப் பொருட்கள் போன்ற உள்நாட்டுத் துறைகளைப் பாதுகாக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது இந்திய விவசாயிகளுக்குப் பெரும் பாதுகாப்பை வழங்கும்.
முதலீடு
முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம்
இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சமாக, அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவிற்கு 20 பில்லியன் டாலர் வரை அந்நிய முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், உற்பத்தித் துறையையும் ஊக்குவிக்கும். மேலும், இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற துறை சார்ந்த நிபுணர்களுக்கு நியூசிலாந்தில் தற்காலிக வேலைவாய்ப்பு விசாக்களை வழங்கவும் இந்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது இருநாட்டு அறிவுப் பகிர்வுக்கும் வழிவகுக்கும்.
விவசாயம்
விவசாயம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு
இந்த ஒப்பந்தம் வெறும் வர்த்தகத்துடன் முடிந்துவிடாமல், விவசாய உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் கூட்டு முயற்சியை மேற்கொள்கிறது. குறிப்பாக கிவி பழம், ஆப்பிள் மற்றும் தேன் உற்பத்தியில் தரம் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கத் தனித்துவமான செயல்திட்டங்களை இரு நாடுகளும் இணைந்து செயல்படுத்தவுள்ளன. இதற்காகத் தொழில்நுட்பப் பகிர்வு மற்றும் அறிவுசார் மையங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வரலாற்று ஒப்பந்தம் இந்தியாவின் ஏற்றுமதித் திறனை உலகளாவிய சந்தையில் மேம்படுத்தவும், நியூசிலாந்துடனான உறவை வலுப்படுத்தவும் மிகப்பெரிய உந்துசக்தியாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.