ஜிடிபி புள்ளிவிவரத்தில் முறைகேடா? 7.8% வளர்ச்சிக்கு எழுந்த கடும் எதிர்ப்பு; சுபாஷ் கார்க் விமர்சனமும் அரசின் விளக்கமும்
செய்தி முன்னோட்டம்
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சகம் அறிவித்தது. ஆனால், மத்திய அரசின் இந்தத் தரவுகள் தவறானவை என்றும், உண்மையில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 2.6 சதவீதம் மட்டுமே என்றும் முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, மத்திய அரசு போலி புள்ளிவிவரங்கள் மூலம் பொருளாதாரத்தை அழகுபடுத்தப் பார்க்கிறது எனக் கடுமையாக விமர்சித்துள்ளது.
குற்றச்சாட்டு
சுபாஷ் சந்திர கார்க் முன்வைக்கும் குற்றச்சாட்டு
கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி மதிப்பு ₹86.05 லட்சம் கோடியாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டின் வளர்ச்சியைக் கூடுதலாகக் காட்டுவதற்காகக் கடந்த ஆண்டின் ஜிடிபி மதிப்பை ₹80 லட்சம் கோடியாக மத்திய அரசு குறைத்து மதிப்பிட்டுள்ளதாக சுபாஷ் கார்க் குற்றம் சாட்டினார்.
பழைய ₹86.05 லட்சம் கோடியுடன் நடப்பு ஆண்டின் ₹88.27 லட்சம் கோடியை ஒப்பிட்டுப் பார்த்தால், நாட்டின் உண்மையான வளர்ச்சி விகிதம் வெறும் 2.6 சதவீதம் மட்டுமே இருக்கும் என்றும், மத்திய அரசு தரவுகளில் குளறுபடி செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசு
மத்திய அரசின் விரிவான விளக்கம் மற்றும் மறுப்பு
சுபாஷ் கார்க்கின் இந்தக் குற்றச்சாட்டை துரதிர்ஷ்டவசமானது எனக் கூறி மத்திய அரசு முழுமையாக மறுத்துள்ளது.
கடந்த ஆண்டின் ₹86.05 லட்சம் கோடி என்பது 2011-12 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட பழைய கணிப்பாகும்.
ஆனால், பிப்ரவரி 2026ல் 2022-23 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு புதிய தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது.
புதிய தரவு ஆதாரங்கள் மற்றும் தொழில்துறை உற்பத்தி குறியீடு ஆகியவற்றின் அடிப்படையில் புதுப்பிக்கப்பட்டதால் தான் இந்த மதிப்பு ₹80 லட்சம் கோடியாக மாறியதே தவிர, வளர்ச்சியைக் கூட்டிக் காட்ட அல்ல என அரசு விளக்கியுள்ளது.
ஒப்பீடு
ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிடக் கூடாது - பியூஷ் கோயல்
பழைய தொடரின் கணிப்பையும் புதிய தொடரின் கணிப்பையும் நேரடியாக ஒப்பிடுவது தவறானது என்றும், ஒரே அடிப்படை ஆண்டைக் கொண்ட புதிய தொடருடன் ஒப்பிடும் போதே சரியான 7.8 சதவீத வளர்ச்சி கிடைக்கும் என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எதிர்க்கட்சிகளும் முன்னாள் அதிகாரிகளும் ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிடுவது கூடத் தெரியாமல் மக்களைத் தவறாக வழிநடத்தப் பார்க்கிறார்கள் என்று விமர்சித்துள்ளார்.
இருப்பினும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும் வேலைவாய்ப்பின்மை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.