LOADING...
விலை ஏறினாலும் குறையாத பெட்ரோல் பயன்பாடு! ஜூன் மாத புள்ளிவிபரங்கள் வெளியானது
விலை ஏறினாலும் குறையாத பெட்ரோல் நுகர்வு

விலை ஏறினாலும் குறையாத பெட்ரோல் பயன்பாடு! ஜூன் மாத புள்ளிவிபரங்கள் வெளியானது

எழுதியவர் Sekar Chinnappan
Jul 02, 2026
04:28 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றமான போர் சூழல் மற்றும் சர்வதேச விநியோகச் சங்கிலித் தடங்கல்களுக்கு மத்தியிலும், இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தேவை வியக்கத்தக்க வகையில் கணிசமாக அதிகரித்துள்ளது. பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுக் குழு (PPAC) வெளியிட்டுள்ள முதற்கட்ட புள்ளிவிவரங்களின்படி, எரிபொருட்களின் சில்லறை விற்பனை விலை உயர்ந்துள்ள போதிலும், இந்திய நுகர்வோரின் வாகனப் பயன்பாடு மற்றும் தொழில் துறைத் தேவைகள் குறையாமல் வலுவாக நீடிப்பது தெரியவந்துள்ளது.

பெட்ரோல் டீசல் பயன்பாடு

விலை உயர்வையும் மிஞ்சிய பெட்ரோல் டீசல் நுகர்வு

கடந்த மே மாதத்தில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 7.50 ரூபாய் வரை உயர்த்தின. ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டி நீடித்ததால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாமல் போனது. இருப்பினும், கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் பெட்ரோல் நுகர்வு கடந்த ஆண்டை விட 7 சதவீதம் அதிகரித்து 3,768 ஆயிரம் மெட்ரிக் டன்களாக எகிறியுள்ளது. அதேபோல், நாட்டின் பொருளாதார மற்றும் தொழில் துறை செயல்பாடுகளின் முக்கிய அடையாளமாகப் பார்க்கப்படும் டீசல் நுகர்வும் 5.52 சதவீதம் உயர்ந்து 8,552 ஆயிரம் மெட்ரிக் டன்களாகப் பதிவாகியுள்ளது.

ஜூலை 1 விலை குறைப்பு

விமான எரிபொருள் சரிவும் ஜூலை 1 விலை குறைப்பும்

மறுபுறம், விமானங்களுக்கான எரிபொருளான ஏடிஎஃப் (Aviation Turbine Fuel) நுகர்வு கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த நிலையில், இந்த ஜூன் மாதத்தில் அது சிறிய அளவிலான சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டை விட ஜூன் மாதத்தில் ஜெட் எரிபொருள் தேவை 0.58 சதவீதம் குறைந்து 726 ஆயிரம் மெட்ரிக் டன்களாகப் பதிவாகியுள்ளது. அமெரிக்கா - ஈரான் போர் தற்பொழுது ஒரு தற்காலிகப் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 70 டாலராகக் குறைந்துள்ளது. இதன் பலனாக, உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில், ஜூலை 1 முதல் ஏடிஎஃப் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறைத்துள்ளன.

Advertisement

எல்பிஜி இறக்குமதி

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் சரிந்த எல்பிஜி இறக்குமதி

மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழலால் இந்தியாவின் சமையல் எரிவாயு விநியோகம் மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்தது அதிர்ச்சித் தகவலாக வெளிவந்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த எல்பிஜி இறக்குமதியில் 90 சதவீதம் கடந்து வரும் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், ஜூன் மாதத்தில் இந்தியாவின் எல்பிஜி நுகர்வு 16.7 சதவீதம் என்ற மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. கடந்த ஆண்டு 2,630 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்த எல்பிஜி தேவை, விநியோகத் தட்டுப்பாடு மற்றும் அரசின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக இந்த ஜூன் மாதத்தில் 2,184 ஆயிரம் மெட்ரிக் டன்னாகக் குறைந்தது.

Advertisement

அடுத்த திட்டம்

வணிக சிலிண்டர் விலை குறைப்பும் ஆகஸ்ட் மாத திட்டமும்

தற்பொழுது சர்வதேச சந்தையில் விநியோகம் சீராகியுள்ளதால், எல்பிஜி மீதான கட்டுப்பாடுகளை அரசு நீக்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, போர்க் காலத்தில் உயர்த்தப்பட்ட 19 கிலோ வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை தற்பொழுது 183.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டு வளைகுடா நாடுகளின் எரிசக்தி விநியோகம் சந்தைக்குத் திரும்பியுள்ளதால், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் முன்கூட்டியே ஆர்டர்களை உறுதி செய்துள்ளன. இதன் மூலம், வரும் ஆகஸ்ட் மாதம் வரை இந்தியாவிற்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி எரிவாயுவின் இருப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement