LOADING...
ஸ்டார்ட்அப்களுக்கு ஜாக்பாட்! அண்டை நாடுகளின் முதலீட்டு விதிகளில் அதிரடி மாற்றம் செய்த மத்திய அரசு; முழு விபரம்
இந்தியாவின் புதிய FDI விதிகள்

ஸ்டார்ட்அப்களுக்கு ஜாக்பாட்! அண்டை நாடுகளின் முதலீட்டு விதிகளில் அதிரடி மாற்றம் செய்த மத்திய அரசு; முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 11, 2026
11:41 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் அண்டை நாடுகளிலிருந்து வரும் நேரடி அந்நிய முதலீட்டு (FDI) விதிகளில் மத்திய அமைச்சரவை முக்கியத் தளர்வுகளை அறிவித்துள்ளது. முன்னதாக, இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளிலிருந்து வரும் எந்தவொரு சிறிய முதலீடும் அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்ற விதி இருந்தது. தற்போது, அந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டு, 10% வரை முதலீடு செய்வதற்குச் சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் உற்பத்தித் துறையை மேம்படுத்தவும், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எளிதாக நிதி திரட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

10 சதவீதம்

10 சதவீத விதிமுறை மற்றும் தானியங்கி அனுமதி

புதிய கொள்கையின்படி, அண்டை நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் ஒரு இந்திய நிறுவனத்தில் 10% வரை பங்குகளை வைத்திருக்க முடியும். இதற்கு அரசின் முன் அனுமதி தேவையில்லை, அதாவது தானியங்கி வழிமுறை மூலம் இந்த முதலீடுகளை மேற்கொள்ளலாம். இருப்பினும், இந்த முதலீடு அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டை முதலீட்டாளர் கைக்கு மாற்றுவதாக இருக்கக்கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், பயன் பெறும் உரிமையாளர் யார் என்பதை அடையாளம் காண பணமோசடி தடுப்பு விதிகளின் கீழ் தெளிவான வரையறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

மாற்றம்

ஏன் இந்த விதிமுறை மாற்றம்?

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் போது, இந்திய நிறுவனங்கள் பலவீனமடைவதைப் பயன்படுத்தி அண்டை நாடுகள் அவற்றை அநியாயமாகக் கைப்பற்றுவதைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், இந்த விதிகளால் பல உலகளாவிய முதலீட்டு நிதியங்கள் இந்திய ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதி திரட்டுவதில் இருந்த சிக்கல்களைப் போக்கவே தற்போது இந்தத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் அதே வேளையில், தடையற்ற முதலீட்டுச் சூழலை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement

ஊக்கம்

உற்பத்தித் துறைக்குக் கிடைக்கும் ஊக்கம்

மின்னணு உதிரிபாகங்கள், சூரிய சக்தி உபகரணங்கள் மற்றும் மூலதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்த புதிய விதிமுறை பெரும் உதவியாக இருக்கும். இத்துறை சார்ந்த நிறுவனங்கள் வெளிநாட்டுத் தொழில்நுட்பக் கூட்டணிகளை விரைவாக உருவாக்க இது வழிவகுக்கும். இதற்காகச் சில குறிப்பிட்ட உற்பத்தித் துறைகளில் அனுமதி பெறுவதற்கான காலக்கெடு 60 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் சர்வதேச விநியோகச் சங்கிலியில் தங்களின் இடத்தை வலுப்படுத்திக்கொள்ள முடியும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

Advertisement