LOADING...
வளைகுடா நாடுகளுடன் இந்தியாவின் மெகா வர்த்தக ஒப்பந்தம்: பேச்சுவார்த்தைகள் தொடங்கின
FTA மேற்கொள்வதற்கான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் வியாழக்கிழமை தொடங்கின

வளைகுடா நாடுகளுடன் இந்தியாவின் மெகா வர்த்தக ஒப்பந்தம்: பேச்சுவார்த்தைகள் தொடங்கின

எழுதியவர் Venkatalakshmi V
Feb 06, 2026
09:42 am

செய்தி முன்னோட்டம்

இந்தியா மற்றும் ஆறு வளைகுடா நாடுகளை கொண்ட ஜி.சி.சி (GCC) அமைப்புக்கு இடையே தாராள வர்த்தக ஒப்பந்தத்தை(FTA) மேற்கொள்வதற்கான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் வியாழக்கிழமை தொடங்கின. சவூதி அரேபியா, UAE, கத்தார், குவைத், ஓமன் மற்றும் பஹ்ரைன் ஆகிய ஆறு நாடுகள் அடங்கிய ஜி.சி.சி அமைப்புடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. இதற்கான விதிமுறைகளில் (Terms of Reference) மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ஜி.சி.சி பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர். சுமார் 5,000 ஆண்டுகால வரலாற்று வர்த்தக உறவைக் கொண்டுள்ள இரு தரப்பினரிடையே, இந்த ஒப்பந்தம் சரக்கு மற்றும் சேவைகளின் தடையற்ற பரிமாற்றத்திற்கும், எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பிற்கும் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியத்துவம்

பொருளாதார ரீதியான முக்கியத்துவம்

தற்போது இந்தியா மற்றும் ஜி.சி.சி நாடுகளுக்கு இடையே சுமார் 179 பில்லியன் டாலர் மதிப்பிலான இருதரப்பு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. வளைகுடா நாடுகளில் சுமார் 1 கோடி இந்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் அவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளையும், இந்திய நிறுவனங்களுக்குப் புதிய சந்தைகளையும் உருவாக்கும். இந்தியா உலகளவில் தானிய உற்பத்தியில் முன்னணியில் உள்ளதாலும், ஜி.சி.சி நாடுகள் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் சிறந்து விளங்குவதாலும், இரு தரப்பின் உணவு மற்றும் எரிசக்தி தேவைகளை இந்த ஒப்பந்தம் பூர்த்தி செய்யும்.

முக்கியப் பயன்கள்

மத்திய அமைச்சர் இதன் முக்கிய பயன்கள் குறித்து விவரித்தார்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இதுகுறித்துப் பேசுகையில், "இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறைகள் மிகப்பெரிய அளவில் பயன்பெறும். ஏற்றுமதி வரி மற்றும் பிற தடைகள் நீக்கப்படுவதால் இந்தியப் பொருட்கள் வளைகுடா நாடுகளில் எளிதாகக் கிடைக்கும்," என்று தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனுடன் இந்தியா ஏற்கனவே தனித்தனியாக வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ள நிலையில், இப்போது ஒட்டுமொத்த ஜி.சி.சி அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. கடந்த 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜி.சி.சி நாடுகளுக்கான ஏற்றுமதி 57 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 121.7 பில்லியன் டாலராகவும் இருந்தது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவே இந்தியாவின் முக்கிய இறக்குமதியாக உள்ளது.

Advertisement