₹12.75 லட்சம் வரை வருமானத்திற்கு வரி இல்லையா? மூலதன ஆதாயத்திற்கும் இது பொருந்துமா? முழு விபரம்
செய்தி முன்னோட்டம்
மத்திய நிதியமைச்சகம் புதிய வருமான வரி முறையின் கீழ் ஆண்டிற்கு ₹12 லட்சம் வரை ஈட்டும் தனிநபர்களுக்குப் பிரிவு 87A மூலம் முழு வரி விலக்கை வழங்கி வருகிறது. சம்பளப் பிரிவில் உள்ள பணியாளர்களுக்கு அளிக்கப்படும் ₹75,000 நிலையான கழிவையும் கணக்கில் கொண்டால், ஆண்டிற்கு ₹12.75 லட்சம் வரை ஈட்டும் சம்பளதாரர்கள் எந்தவொரு வருமான வரியும் செலுத்த வேண்டியதில்லை. இருப்பினும், இந்த பூஜ்ஜிய வரி விலக்கு என்பது ஸ்லாப் விகிதங்களின் கீழ் வரும் வழக்கமான சாதாரண வருமானத்திற்கு மட்டுமே முழுமையாகப் பொருந்தும்.
மூலதன ஆதாயம்
மூலதன ஆதாயங்களுக்கு பிரிவு 87A கழிவு பொருந்துமா?
பங்குச்சந்தை, பரஸ்பர நிதிகள், தங்கம் அல்லது நில விற்பனை மூலம் பெறப்படும் மூலதன ஆதாயங்கள் சிறப்பு வரி விகிதங்களின் கீழ் கணக்கிடப்படுவதால், அவற்றுக்கு இந்த ₹12.75 லட்சம் பூஜ்ஜிய வரி சலுகை நேரடியாகப் பொருந்தாது.
ஒருவரது மொத்த வருமானம் ₹12 லட்சத்திற்குள் இருந்தாலும் கூட, மூலதன ஆதாயங்களின் மீது விதிக்கப்படும் சிறப்பு வரியை ஈடுசெய்ய பிரிவு 87A-ன் தள்ளுபடியை பயன்படுத்த முடியாது என்று வரி நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, பங்குச்சந்தையில் லாபம் ஈட்டும் முதலீட்டாளர்கள் இதனைப் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியமாகும்.
வரி விதிகள்
குறுகிய கால (STCG) மற்றும் நீண்ட கால (LTCG) மூலதன ஆதாய வரி விதிகள்
பங்குச்சந்தையில் ஒரு வருடத்திற்குள் பங்குகளை விற்று ஈட்டப்படும் குறுகிய கால மூலதன ஆதாயங்களுக்கு (STCG) பிரிவு 111A-ன் கீழ் 20% சிறப்பு வரி விதிக்கப்படுகிறது.
அதேபோல, ஒரு வருடத்திற்கும் மேலாகப் பங்குகளை வைத்து விற்று ஈட்டப்படும் நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்குப் (LTCG) பிரிவு 112A-ன் கீழ் 12.5% வரி விதிக்கப்படுகிறது.
இருப்பினும், நீண்ட கால மூலதன ஆதாயத்தில் முதல் ₹1.25 லட்சம் வரை மட்டுமே வரி விலக்கு அளிக்கப்படுகிறதே தவிர, அதற்கு மேற்பட்ட லாபத்திற்குப் பிரிவு 87A தள்ளுபடியைப் பயன்படுத்த முடியாது.
தவறுகள்
முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டிய தவறுகளும் விழிப்புணர்வும்
இந்தியக் குடியுரிமை பெற்ற தனிநபர்கள் தங்களுடைய அடிப்படை வரி விலக்கு வரம்பான ₹4 லட்சத்தில் ஏதேனும் பயன்படாமல் இருந்தால், அதைக்கொண்டு குறுகிய கால மூலதன ஆதாயங்களை (STCG) ஓரளவு ஈடுசெய்ய முடியும்.
ஆனால், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்த சலுகை கிடையாது.
எனவே, மொத்த வருமானம் ₹12.75 லட்சத்திற்குள் இருப்பதால் பங்குச்சந்தை லாபங்களுக்கும் வரியே கட்ட வேண்டியதில்லை என்று முதலீட்டாளர்கள் தவறாகக் கருதக் கூடாது.
மூலதன ஆதாயங்களுக்கான வரிகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்வதே அபராதங்களைத் தவிர்க்க சிறந்த வழியாகும்.